பக்கம்:அலிபாபா.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அலிபாபா


மனம் கலங்கித்தான் இருந்தான். காலையிலே சென்ற காஸிம் இரவு வரை திரும்பி வராததால், அவனும் துயரமடைந்து உளைந்து கொண்டிருந்தபோதிலும், அவளைப் பார்த்து ஆறுதல் சொன்னான். ஒருவேளை, மற்றவர்களுக்குத் தெரியாமல் வீட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக, இருட்டிலேயே வரக்கூடும் என்றும், நேர் பாதையில் வராமல், நகரைச் சுற்றிக்கொண்டு வந்தால், நேரம் ஆகத்தான் செய்யும் என்றும் அவன் அபிப்பிராயப்பட்டான். அவனுடைய மதினி சற்று ஆறுதலடைந்து, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றாள்.

அன்று நள்ளிரவு வரை காஸிம் வராததால் அவள் நடுக்கமடைந்தாள். உள்ளத்திலே கொந்தளித்துக் கொண்டிருந்த துக்கத்தை வெளிப்படுத்தி உரக்க அழலாம் என்றால், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் இரகசியத்தை அறிந்துகொண்டுவிடுவார்கள் என்று அஞ்சினாள். ஆகவே, அவள் வாயைத் திறக்காமல், மெளனமாகவே அழுது கண்ணீர் பெருக்கினாள், ‘பாவியாகிய என்னாலேயே எல்லாம் விளைந்து விட்டது! பொன்னைப்பற்றிய இரகசியத்தை நான் ஏன் அவரிடம் சொன்னேன்? மைத்துனனின் செல்வத்தை எண்ணி, நான் ஏன் பொறாமை கொண்டேன்? என் பொறாமையே என் குடியைக் கெடுத்துவிட்டதா?’ என்று. அவள் இரவு முழுவதும் தன்னைத்தானே பல விதமாக அலட்டிக்கொண்டிருந்தாள். மறுநாள் பொழுது புலர்ந்தவுடனேயே, அவள் மீண்டும் அலிபாபாவை நாடி ஓடிச்சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/24&oldid=512483" இலிருந்து மீள்விக்கப்பட்டது