பக்கம்:அலிபாபா.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விருந்து, நடனம், மரணம்!

63



கேட்டான். அப்பொழுது ஹஸன், “உப்புள்ள பண்டங்களை நான் உண்ணக்கூடாது என்பதுதான் வைத்தியர் கட்டளை!” என்றான். உடனே அலிபாபா, 'இவ்வளவுதானா! இன்னும் சமையல் முடியவில்லை. நான் உள்ளேபோய் உப்பில்லாமலே பதார்த்தங்களைத் தயாரிக்கச் சொல்லி விடுகிறேன்!” என்று சொல்லி, உள்ளே ஓடிச் சென்றான். அங்கு மார்கியானா விடம், இறைச்சி முதலிய எதிலும் உப்பு போடாமலே சமைக்கும்படி சொன்னான். அதைக் கேட்டு அவள் “உப்பில்லாமல் உண்ணக்கூடிய விருந்தாளி யார் வந்திருக்கிறார்?” என்று கேட்டாள். “யாராயிருந்தாள் உனக்கென்ன? உப்பு வேண்டாமென்றால், என் கட்டளைப்படி நீ செய்!” என்று அவன் உத்தரவிட்டதும், அவளும், அப்படியே ஆகட்டும்! என்று சொல்லி விட்டாள். அலிபாபா முன் வாயிலுக்குப் போய் விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

மார்கியானாவுக்கு உப்பில்லாமல் உண்ணும் அந்த விசித்திரமான விருந்தாளியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அவள், விரைவாகச் சமையல் வேலைகளை முடித்துக்கொண்டு, அடிமை அப்துல்லாவின் உதவியால், மேசைகளின்மீது தட்டுகளையும், உணவுகளையும் எடுத்து வைத்துவிட்டு, முன்புறம் சென்றாள். அங்கே ஹஸ்னைக் கண்டதும், அவன் யார் என்பதை அவள் உடனே தெரிந்து கொண்டாள். பழைய சைத்தானே புது உடைகளில் வந்திருக்கிறான் என்பதை அவள் உணர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/65&oldid=512510" இலிருந்து மீள்விக்கப்பட்டது