பக்கம்:அலிபாபா.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விருந்து, நடனம், மரணம்!

67



அருகிலே சென்று சில அபிநயங்கள் காட்டினாள். நேரம் செல்லச் செல்ல, ஆட்டத்தின் வேகம் அதிகரித்தது. அவள் பம்பரம்போல் சுழன்றாள். அலிபாபாவும் ஹஸனும், வைத்த கண்ணை வாங்காமல், அவளையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் உடலைக் குலுக்கி ஆடிக் கொண்டே, அப்துல்லாவிடம் இருந்த கஞ்சிராவை வாங்கி, இடக்கையிலே வைத்துக்கொண்டு பிச்சுவாவின் முனையை அதற்கு நேரே பிடித்துக் காட்டினாள். பிறகு, பிச்சுவாவைத் தன் மார்புக்கு நேரே பிடித்தாள். உடனே, அலிபாபாவிடம் சென்று, சில நிமிடங்கள் ஆடினாள். அதேபோல் ஹஸனிட மும் நின்று ஆடினாள். அவளுடைய கண்களும் கால்களும் கைகளுமே பேசத் தொடங்கியவை போல் இருந்தன. இவ்வாறு சிறிது நேரம் ஆடியபின் அவள் நடனத்தை நிறுத்திக்கொண்டு, உடலை வளைத்து, அலிபாபாவிடம் கஞ்சிராவை நீட்டினாள். அவன் உடனே ஒரு தங்கக் காசை அதிலே வைத்தான். அடுத்தாற்போல் காஸிமின் மகனும் ஒரு காசை எடுத்து அதிலே போட்டான். பிறகு, மார்கியானா கஞ்சிராவை ஹஸன் பக்கமாக நீட்டினாள். அவன் இடுப்பிலிருந்த பணப்பையை எடுப்பதற்காகத் தலையைக் குனிந்துகொண்டு, தன் அரைக் கச்சையை இரண்டு கைகளாலும் தடவிப் பார்த்தான். அந்த நேரத்தில் மார்கியானா, அவளுக்கே உரித்தான உறுதியுடன், வலக்கையிலே பிடித்திருந்த பிச்சுவாவை ஓங்கி அவன் நெஞ்சிலே குத்தி இறக்கிவிட்டாள்! அந்தக் கணத்திலேயே அவன் தரையிலே சுருண்டு விழுந்து மாண்டு போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/69&oldid=512513" இலிருந்து மீள்விக்கப்பட்டது