பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அவள் விழித்திருந்தாள்


5

கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவளை கங்கம்மா கனிவுடன் பார்த்தாள். தம்பியின் மனைவி. தனக்கு அப்புறம் இந்த வீட்டை நிர்வகிக்கப்போகும் எஜமானி. முத்து முத்தாகக் குழந்தைகள் பெற்று, தன்னை “அத்தை” என்று அழைக்க வைக்கும் பெண். அவளை உள்ளம் நலுங்காமல் வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைபட்டாள். பரிவுடன் சிரித்தபடி, “நர்மதா! மொதல்லெ வாசல்லே ஒரு கை ஜலம் தெளித்து கோலம் போட்டுடு நீதான் இந்த வீட்டு கிருஹ லட்சுமி. அப்படியொரு சம்பிரதாயம் இருக்கு.. இந்தா...” என்று வாளியில் ஜலம் கொண்டு வந்து வைத்தாள்.

நர்மதா கலங்கிய விழிகளுடன் அவளை ஏறிட்டுப் பார்த்தாள். கண் இரப்பைகள் சிவந்து கிடந்தன. பேசாமல் வாளி ஜலத்துடன் வாசலுக்குப் போய் ஜலம் தெளித்து, இழை இழையாகக் கோலம் போட ஆரம்பித்தாள்.

அப்போது பக்கத்து வீட்டு வாசற்கதவு திறந்தது. பாலு பாக்டரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தான். இவளைப்பார்த்துச் சிரித்தபடி “அதுக்குள்ளே எழுந்தாச்சா? பூரணி இன்னும் எழுந்திருக்கலை.” என்று சொல்லிக் கொண்டே அவளைத் தாண்டி நடந்தான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். நெடிய உருவம், கம்பீரமான உருவம். ஒர் ஆணின் ஆளுமை முழுமையாகத் தெரியும் தோற்றம். இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தவள் உள்ளே திரும்பி பட்டப்பாவின் தோற்றத்தையும் நினைத்துப் பார்த்தாள்.

நர்மதா கொல்லைப்பக்கம் போனாள். தோட்டம்பூராவும் எலுமிச்சை, நார்த்தை, மற்றும் மலர்ச்செடிகள் நிரம்பிக் கிடந்தன. கம்மென்று மணம் வீசிக்கொண்டிருந்தது. கிணற்றில் பாறை இடுக்குகள் வழியாக நீர் குபு குபுவென்று கசிந்து கொண்டிருந்தது.