பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அவள் விழித்திருந்தாள்

சுற்றி சுற்றி வருகிறானே. என்னிக்காவது தன் தலையில் கல்லைப் போட்டுவிட்டு இவளை இழுத்துக்கொண்டு போய் நாலு மாசம் வைத்திருந்து நடுத்தெருவில் நிறுத்திவிட்டுப் போய்விடுவானே என்று அம்மா மடியில் நெருப்பைக்கட்டிக் கொண்டிருந்தாள். வறுமைச் சேற்றில் மலர்ந்த தாமரைப் போல பழையது சாப்பிட்டே பளபளவென்று வளர்ந்து நின்றாள் நர்மதா.

கங்கம்மா இரட்டை வடம் சங்கிலியும், நாலு வளையல்களும், முத்துத்தோடும் எடுத்து வந்து நிச்சயதார்த்தம் நடத்தினாள். வெங்குலட்சுமி நகைகளின் மதிப்பில் மயங்கிப்போயிருந்தாள். எப்படியாவது சாயிராமின் பார்வையிலிருந்து தப்பி நர்மதா கல்யாணமாகிப் போனால்போதும் என்கிற நிலை.

முதலில் அம்மாவின் பேரில் வந்த ஆத்திரம் படிப்படியாகத்தணிந்தது.