பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1

அயல் நாட்டு சென்டின் மணம் குபீரென்று வீடெங்கும் பரவிய அந்த வாசனை அவன் வரும்போது மட்டும் வரும் வாசனை. ஊரெங்கும் விளக்கேற்றி விட்டார்கள். அந்த வீடு மட்டும் இருண்டு கிடந்தது. வீட்டில் ஏன் அஸ்தமித்த பிறகு கூட விளக்கு ஏற்றவில்லை என்று தன்னையே கேட்டுக் கொண்டு பட்டப்பா ஜன்னல் வழியாகக் காமரா அறைக்குள் வருகிற வெளிச்சத்தில் அங்கு கிடந்த மேஜை மீது பூப்பொட்டலத்தையும், பலகாரங்களையும் வைத்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்தான். காரை பெயர்ந்த சுவரில் 'ஸ்விட்ச்' லொட லொடவென்று ஆடிக்கொண்டிருந்தது. மிகவும் கவனமாக அதைத் தட்டிவிட்டதும் அறையில் விளக்கு எரித்தது.

கூடத்தைத்தாண்டி வெனிச்சம் லேசாய்ப்பரவி சமையலறையில் அவள் தரையில் படுத்திருப்பதைக் காட்டிக் கொடுத்தது. சரிந்து கிடந்த மலர்க்குவியல் மாதிரி இருந்தாள் அவள். பின்னல் தரையில் புரள, அதிலிருந்து மலர்ச்சரம் துவண்டு விழ, ஒரு சித்திரம் போல் இருந்தாள் நர்மதா, இனிமேல் ஒளிந்து கொள்வதில் லாபமில்லை என்று நினைக்து நர்மதா வெளியே வந்து நின்றாள். அவனிடமிருந்து வீசும் வாசனையை முகர்ந்து முகம் சுளித்தாள் அவள். பட்டப்பா மட்டும் தன் மனைவியை ஆசையோடு, ஆவலோடு ஏற இறங்கப் பார்த்தான். வெட வெட வென்று ஒரு கொடிபோல செக்கச் செவேல் என்று சிலைமாதிரி இருந்தாள். அவள் வெடுக்கென்று முகத்தைத்திருப்பிக்கொண்டாள்.

"என்ன நர்மதா வந்திருக்கிறவனை வாங்கன்னு சொல்ல மாட்டேங்கறே-"

அவள் முகம் சிவந்தது.