பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அவள் விழித்திருந்தாள்

இந்தப் பெண்ணை இனிமேல் இங்கே வைத்திருக்கக்கூடாது. இன்னும் கொஞ்சநாளில் சந்தி சிரிக்க அடித்து விடுவாள். இல்லை ஒரு முழம் கயிற்றில், பாழும் கிணற்றில், மூட்டைப் பூச்சி மருந்தில் தன்னை மாய்த்துக் கொள்வாள். அவளை அங்கேயே அனுப்பிவிட வேண்டும்.

அம்மாவும் பொண்ணும் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

“என்னவோ நடந்துபோச்சு. அதுக்காக நம்ப கெட்டுப் போறதா என்ன? நான் கூட சின்னவயசுலே வீணாப்போனவ தான்...அப்புறமா புருஷனைப்பத்தி நெனச்சிருப்பேனா”

நர்மதா பேசாமல் இருந்தாள். நாலு பெற்றவள் புருஷன் செத்துப்போனபிறகு புருஷனை நெனச்சுண்டு இருந்தேனா என்கிறாள்.

பட்டப்பா வந்தவுடன் உடனே கிளம்பிவிட வேண்டும் என்று நர்மதா நினைத்தாள். அவன் வெங்குலட்சுமியின் கண்களில் படுவதை இவள் விரும்பவில்லை. ஆகவே, அவன் வந்துவிட்டுப் போன மறுநாளே நர்மதா “நான் ஊருக்குப் போறேன்” என்று மொண்ணையாக அம்மாவிடம் சொன்னாள்.

“அங்கேதானே போறே?”

"பின்னே எங்கே போவேன்? எவனோடும் போயிடமாட்டேன். உனக்கு இருக்கிற நம்பிக்கையெல்லாம் எனக்கும் இருக்கு. நம்ப பெண்கள் நம்பற எல்லா தர்மங்களையும் நானும் நம்பறேன். இங்கே இருக்கப்பிடிக்கலை எனக்கு"

“சரி...”

பஸ் ஸ்டாண்ட் வரை வெங்குலட்சுமி வந்தாள். பிழியப் பிழிய அழுதாள். வழி நெடுக, “ஏமாந்துட்டேண்டி” என்று மன்னிப்பு கேட்பதுபோல பேசினாள். நர்மதாவுக்குப் பாவமாக இருந்தது. நினைவு தெரிந்த நாளாய் அம்மா யார் வீட்டிலோ அடுப்படியில் வெந்துகொண்டிருக்கிறாள். அவளை சுகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அண்ணா நினைக்கவில்லை.

“நீ ஏனம்மா இந்த வயசிலே வேலைக்குப்போகவேண்டும்? பேசாம நான் போடற கஞ்சியோ கூழோ சாப்பிட்டுட்டு இரேன்” என்று உரிமையாகப்பிள்ளை ஒருநாள் சொன்னதில்லை.