பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

51

அவனும், அவன் மனைவியும் சினிமாவுக்கு, டிராமாவுக்குப் போவதென்ன வருவதென்ன என்று இருந்தார்கள். மாசக் கடைசியில் அம்மாவிடமே சில்லறை கேட்பான் பிள்ளை.

நர்மதா வந்திருந்தநாட்களில் அவளிடம் ஐந்து பத்தென்று கேட்டுக்கொண்டேயிருந்தான்.

பஸ் கிளம்ப ஆரம்பித்தது.

“போயிட்டு வரேன்.”

“சரி” என்று தலையசைத்தாள் கிழவி. கன்னங்களில் கோடாகக் கண்ணீர் வழிந்தது. அவசரமாகப் பூ விற்றவளிடம் இரண்டு முழங்கள் பூ வாங்கி அவளிடம் கொடுத்தாள்.

அம்மா தூரத்தில் புள்ளியாக மறைந்துபோனாள். தன்னை மறந்து சிறிதுநேரம் நர்மதா வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று வந்திருந்த பட்டப்பாவை அவ்வளவுதுரரம் விரட்டியிருக்கவேண்டாம் என்று அவளுக்குத்தோன்றியது. அவனிடம் அந்தக்குறை ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இவளிடம் உயிராக இருக்கிறான்.

பஸ் ஏதோ ஊரில் நின்றது. அவளுக்கு பஸ்ஸின் உள்ளே திரும்பியவுடன் ஒர் அதிர்ச்சி காத்திருந்தது.

பாலு ஏறிக்கொண்டிருந்தான். அவனும் அதிர்ச்சியடைந்தான். “கோபம் நீர்ந்து வறாப்லே இருக்கு” என்றான் அவன் பக்கமாக நின்றுகொண்டு. அவனுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. முன்னாடி ஒருகிராமத்தான் தூங்கிவழிந்தான்.

“கோபமா? யார் சொன்னது?”

“பட்டப்பாதான். அவசரமாகச் சாப்பாடு போட்டு விரட்டிட்டான்றான் பாவம்!”

நர்மதாவின் பக்கத்தில் இருந்த பெண் இறங்குவதற்கு எழுந்தாள்.

“உட்காரலாமா?” என்று கேட்டான் பாலு.

“உம்” என்று நகர்ந்து உட்கார்த்தாள் அவள்.

“எங்கே போயிட்டுவரேள்?”