பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

63

டம்ளர் பாலை எடுத்து சாக்கடையில் வீசினாள். இளம் மஞ்சள் நிறத்தில் பால் கசிந்து கசிந்து முற்றத்தில் விழுந்தது.

அந்த வீட்டில் மயான அமைதி நிலவியது. கங்கம்மா அடுத்த இரண்டு நாட்கள் ஸ்னானம் செய்யவில்லை. ஜபதபங்கள் இல்லை. சாவிக்கொத்தை ஆணியிலிருந்து இடுப்பில் சொருகிக் கொள்ளவில்லை. பூரணியோடு பேசவில்லை. பாலுவை நிமிர்ந்து பார்க்கவில்லை. “அத்தே” என்று வரும் பூரணியின் குழந்தையை தூரத்தள்ளிவிட்டு பிரமைபிடித்த மாதிரி இருந்தாள். தலைவலி என்று படுத்தாள். ஒரு கையும் காலும், வாயின் ஒரு பக்கமும் கோணலாகி பேசும் சக்தியை இழந்தாள்.

சிறுவயதிலிருந்து தன்னை வளர்த்தவள் பேசும் சக்தியை இழந்து படுக்கையில் கிடந்தபோதுதான் பட்டப்பா தன் தவற்றை முழுமையாக உணர்ந்தான். இவன் தன் சங்கோசத்தை விட்டு அக்காவிடம் பேசியிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காதே.

விதவிதமாகச் சமைத்துப் பரிமாறியவள், பாலை விழுங்கும் சக்தியையும் இழந்திருந்தாள். மெதுவாக மிகுந்த சிரமத்துடன் பாலை சிறிதளவே சாப்பிட முடிந்தது.

டாக்டர் வந்து பார்த்துவிட்டு, "ஸ்ட்ரோக்' என்று சொல்லி மருந்து கொடுத்தார். ஊசி போட்டார். நாள் கணக்கிலும் இருப்பாள், மாசக்கணக்கிலும் இருப்பாள் என்று சொன்னார்.

பாலு அடிக்கடி வர ஆரம்பித்தான். ஆனால் நர்மதாவின் மனதில் மாறுதல் ஏற்பட ஆரம்பித்தது. அவனிடம் அதிகம் பேச்சு கொடுக்காமல் இருந்தாள்.

“என்ன? வீட்டுப்பக்கம் வரதேயில்லை. பூரணியால் ஒண்டியாகக் குழந்தையை சமாளிக்க முடியலெ.”

“அக்காவை விட்டுட்டு எங்கே வரது?”

“நீ ரொம்ப மாறிப்போயிட்டே. முன்னே மாதிரி இல்லை”

“மாறத்தானே வேண்டும்? ஆரோக்யமா நடமாடிண்டு இருந்த அக்கா இப்படி படுத்தப்புறம் எனக்கு ஒண்னும் பிடிக்கலை.”

பாலுவுக்குச் சப்பென்று போய்விட்டது. திடீரென்று