பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அவள் விழித்திருந்தாள்

மனைவிக்கோ, தாய்க்கோ எல்லோரும் பூ வாங்கிப் போகிறார்கள்.

அம்மா ஆசை ஆசையாக இந்தக் கல்யாணத்தை இந்த அழகான புருஷனோடு நடத்தி வைத்தாள். அவள் கண்டாளா பட்டப்பாவின் குறையைப்பற்றி?

நர்மதாவின் நெஞ்சத்தில் அந்த நினைவுகள் பொங்கி எழுந்தன. சில நினைவுகள் மனதில் நிலைப்பதில்லை. சிலநிலைத்து நின்று விடுகின்றன. கண்ணிர் பெருகத் தேம்பித் தேம்பி அழுதாள். இந்த மனுஷன் எதற்காக என்னைத்தேடி வருகிறான்..? என்னைத்தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிறான்? அதற்கு மேலே இந்த உடம்புக்கு ஒரு தேவை இருக்கிறதே. அதை.. அதை..இவனால்?..

வாழ்க்கையைச் சுவையோடு அனுபவிக்க அவளுக்கு ஆசை. நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும் அவளுக்கு காரில்போக ஆசை. நகை நட்டுகள் பூட்டிக்கொள்ள ஆசை. பட்டுப்பட்டாக உடுத்திக்கொள்ள விருப்பம். கண்ணும், மனமும்நிறைந்த கணவனை அடைய விருப்பம்.

இத்தனை எண்ணங்களும், கனவுகளும் சரிந்து போயின. திடும்மென்று அம்மா கல்யாணத்தை நிச்சயம் பண்ணிக் கொண்டு வந்தாள். நம்பஅந்தஸ்த்துக்கு இந்த வரன் கிடைச்சதே பெரிய பாக்கியம் என்றாள்.

நர்மதாவின் நெற்றியெங்கும் வியர்வைத்துளிகள் அரும்பின. முந்தானையால் நெற்றியைத்துடைத்துக்கொண்டு அழிந்துபோன பொட்டைச் சரிசெய்து கொண்டாள்.

தெருவில் போவோர் வருவோர் குறைந்து விட்டது . யார் வீட்டிலிருந்தோ ரேடியோவில் பாடல் கேட்டது. எதிர் வீட்டுத் தென்னை மரத்தின் கீற்றுகளுக்கிடையே நிலா தெரிந்தது.

அந்தத்தனிமையும், இரவும் அவளுக்குக் கசந்தது. அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள்.