பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்109



பரஞ்சோதியார் என்ற தனிமனிதருக்கு- அவர் கொண்ட கொள்கைக்கு ஏற்பட்ட சோதனையாகும் இது. அந்தச் சூழ்நிலையில் அவர் செய்த செயலைச் சராசரி மனிதர்கள் ஆகிய நாம், நம்முடைய சிறிய அளவு கோலைக் கொண்டு அளவிடுவது சரியாகாது.

அதனால்தான் நாயன்மார்களை சராசரி மனிதரிலிருந்து மிக உயர்ந்து நிற்கும் அடியார்கள் - வீரர்கள் என்று சேக்கிழாரே போற்றுகிறார்.

அகங்கார, மமகாரமாகிய இரண்டையும் அறவே போக்கினால்தான் அடியாராக ஆக முடியும். இவை இரண்டும் போன பிறகு மகன் என்றும், மனைவி என்றும் உறவு கொண்டாடக் கூடியவர்கள் நாயன்மார்களாக இருக்க இயலாது.

நான் என்ற அகங்காரமும், எனது என்ற மமகாரமும் போன பிறகு, என் மனைவி, என் பிள்ளை என்று நாயன்மார்கள் எண்ண மாட்டார்கள்.

எனவே அகங்கார, மமகாரம் அற்ற இவர்கள் செயலை- இவை இரண்டின் வடிவமாக வாழுகின்ற நாம் அளவிட முற்படுவதும், ஆராய்வதும் பொருத்த மற்றதாகும்.

அகங்கார, மமகாரம் அற்றவர்கள்தாம் நாயன்மார்கள். அத்தகைய நாயன்மாராக இயற்பகையாரை நம் கண்முன் நாம் காணவேண்டும்.

தூர்த்த வேடத்தில் வந்த ஒருவர் "காதல் உன் மனைவியை வேண்டி வந்தனம்" என்று எதிரே சொன்ன போதிலும் இயற்பகையாருக்கு எவ்வித உணர்ச்சி வேறுபாடும் தோன்றியதாகத் தெரியவில்லை.

"இது நமக்கு முன்பு உள்ளது" என்று கூறுகின்ற அளவிற்கு வளர்ந்துநிற்கின்றார் இயற்பகையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/117&oldid=481575" இலிருந்து மீள்விக்கப்பட்டது