பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



இந்த நாட்டினுடைய மிக அடிப்படையான கொள்கை வினைக்கொள்கை. சமணர்களுக்கும் அது உடன்பாடு. பெளத்தர்களுக்கும் அது உடன்பாடு என்பது ஒருபுறம் இருக்க- இந்த வினை உருத்துவந்து ஊட்டும் என்பதிலே சில கருத்து மாறுபாடுகள் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும், சமணர்களுக்கும் உண்டு, ஆனால் அது ஊட்டியே தீரும் என்பதில் எந்தவிதமான ஐயப் பாடும் இல்லை. இனி அதற்கு விளக்கம் தருகிற முறையிலே ஒரே பாத்திரத்தை இரண்டு வகையாகப் பேச வைக்கிறான் கவிச்சக்கரவர்த்தி.

இராமனுக்குப் பட்டம் இல்லை, பரதனுக்கு என்று சொன்னவுடனே இலக்குவன் எல்லையற்ற சினத்தோடு 'விதிக்கும் விதி ஆகும் என் வில்தொழில் காண்டி என்று பேசுகின்றான். அதே இலக்குவன் மனம் மாறி, பிராட்டி வருந்தி இராமனைத் தேடிக்கொண்டு செல் என்றபோது, வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ? என்று பேசுகின்றான்.

ஆகவே விதிக்கொள்கை இரண்டு பேருக்கும் உடன் பாடு என்பதிலே எந்தவித ஐயப்பாடும் இல்லை. சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையில்-வினைக் கொள்கைக்கு மிகவும் அழுத்தம் கொடுத்துச் சில பகுதிகள் வருகின்றன. கோவலன் கொலையுண்டதற்குக் காரணம், ஊழ்வினையே என்கிறார். அந்த அளவுக்குக் கம்பன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் விடையாகும்.

19. சுந்தர காண்டம் சீதையின் பெருமையைப் பேசுவதா? அல்லது அனுமனின் சிறப்பைக் கூறுவதாக எழுந்ததா?

கவிச்சக்கரவர்த்தியினுடைய ஈடு இணையற்ற புலமைச் சிறப்புக்குச் சுந்தர காண்டம் ஒர் அடையாளம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/30&oldid=480966" இலிருந்து மீள்விக்கப்பட்டது