கம்பராமாயணம் - வினா விடை
1. பெண்ணைப் போற்றிய இராமன், தன் அருமருந்தன்ன மனைவியைப் பார்த்து,
... ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண்
மீண்டது என் நினைவு? எனை விரும்பும் என்பதோ?
என நாக் கூசாமல் கூறியது அவரது பண்புக்கு மாசு உண்டாக்கியது ஆகாதா?
இந்த வினாவை எழுப்புவதற்கு முன்னர் இது தோன்றிய நிலைக்களத்தைச் சிந்திக்க வேண்டும். ஒரு மாபெரும் தவறு செய்துவிட்டாள் பிராட்டி. மானின் பின்னே இராகவன் சென்ற பிறகு லட்சுமணா என்ற குரல் கேட்டு, இராகவனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று நினைக்கிறாள். இலக்குவனைப் போகுமாறு பணிக்கிறாள்.
கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை
யார் எனக் கருதி இவ் இடரின் ஆழ்கின்றீர்?
என இளையபெருமாள் எடுத்துக்கூறியும்,
ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும்
நீ வெருவலை நின்றனை