திரைக்கவித் திலகம்
கவிஞர் மருதகாசி
திரை இசைப் பாடல்களைத்
திவ்யப் பிரபந்தமாய் வழங்கியவர்!
அமுதப் பிரவாகமாய் என் இதயத்தில்
அலைமோதிய அவரது பாடல்களை
இன்றும் நான் நினைவு கூர்கிறேன்.
"நீலவண்ணக் கண்ணா வாடா"-இந்தப் பாடல்தான் அந்த நாளில் என் இதயத்தைத் தாலாட்டியது.
"சமரசம் உலாவும் இடமே" - இந்தப் பாடல்தான் அந்த நாளில் எனக்கு வாழ்வின் தத்துவத்தை அறிமுகப் படுத்தியது.
"நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே" - இந்தப் பாடல்தான் அந்த நாளில் என் நெஞ்சத்தை உருக வைத்தது.
நான் ரசித்த திரையிசைப் பாடல்கள் இப்படிப் பலநூறு பாடல்கள் ஆகும்.
அப்பொழுதெல்லாம் இந்தப் பாடல்களைப் படைத்த பாடலாசிரியர் யார் என்று பெயர் கேட்டுத் தெரிந்து கொண்டதில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் நான் மிகவும் ரசித்த பாடல்கள் பலவற்றைப் படைத்த பிரம்மா மருதகாசி அவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட பொழுது, என்னிடம் பச்சையப்பன் கல்லூரியில் ஆராய்ச்சி செய்ய வந்த செல்வி இரா. வைஜயந்தியிடம், கவிஞர் மருதகாசி அவர்களின் திரையிசைப் பாடல்களைத் திரட்டி ஆய்வு செய்யுமாறு, வழிகாட்டினேன். அந்த ஆய்வும் வெற்றி பெற்றது.