பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


கிராமபோன் ரிக்கார்டுகளைப் போட்டுக் காட்டி, மெட்டுகளுக்குப் பாடல் எழுதி ரிகார்டு செய்யுங்கள், என்று G. R. அவர்களிடம் சொல்ல, அவர் எந்தக் காரணத்திற்காக, சேலத்திற்கு (மாடர்ன் தியேட்டர்ஸ்) வர மாட்டேன் என்று சொன்னாரோ, அதே காரணம் இங்கும் தொடர்ந்ததும், G.R. மாதுரி தேவி அவர்களிடம், “இதற்கு நான் தேவையில்லை; வேறு யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள்” என்று சுமுகமான முறையில் சொல்லிவிட்டு அப்பொழுது H. M. V. யில் இருந்த, எனது அன்பிற்குரிய K. V. மகாதேவன் அவர்களை, இசை அமைப்பாளராகப் போடும்படி சொல்லிவிட்டு, விலகிக் கொண்டார். பல படங்களில் நாங்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்யும் சந்தர்ப்பத்தையும், ஒரே குடும்பம் போல் எங்கள் இரண்டு குடும்பங்களும் செயல்படும் நிலைமையையும் இறைவன் உண்டாக்கினார் என நினைக்கிறேன்.

மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து பிரிந்தவரும் என்னுடைய வளர்ச்சிக்காகப் பெரும் பாடுபட்டவருமான அண்ணன் M. A. வேணு அவர்கள், தனது சொந்தப் படங்களுக்கு என்னையும், ஷெரீஃப் அண்ணன் அவர்களையும் பாடல்கள் எழுத வைத்து, ஊக்குவித்ததை நான் என்றென்றும் மறக்க முடியாது.

இப்படி இருக்கும் போது பாகவதருடைய "புது வாழ்வு" படத்திற்கு ஒரு நகைச்சுவைப் பாடல் எழுதுவதற்கு கலைவாணருடைய ஒப்புதல் வாங்க என்னையும், திரு G. ராமனாதன் அவர்களையும் N.S.K. வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். N.S.K. யிடம் பாடல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கு அன்றுதான் அறிமுகம்.

ஆனால் N.S.K. அவர்கள் அவருக்கே உரிய பாணியில் என்னிடம் “எனக்கு இதுவரை உடுமலையார், கே. பி. காமாட்சி இருவரைத் தவிர, ஒரே ஒரு பாடல் ஆசிரியரான