16
சந்தான கிருஷ்ண நாயுடு மட்டும்தான் எழுதினார். “நீங்கள் எழுதித் தரும் பாடல் எனக்குப் பிடிக்கவில்லையென்றால் நான் மறுபடியும் உடுமலையாரைக் கூப்பிடு என்று சொல்வேன். நீங்கள் மனம் ஒடிந்து விடுவீர்கள். நன்றாய் இருந்தால் பாராட்டுவேன். சம்மதம் என்றால் எழுதுங்கள்” என்றார்.
நான் அதைச் சவாலாக எடுத்துக் கொண்டேன். “பாடலுக்குரிய காட்சி அமைப்பைச் சொல்லுங்கள்” என்றேன். அதற்கு அவர், “ஒரு குருவிக்காரனும், குருவிக்காரியும் பகல் முழுவதும் தனித் தனியாக வியாபாரத்திற்குச் சென்று விட்டு வருகிறார்கள். அவன் அவள் மீது சந்தேகப்பட்டு ஏதேதோ கேட்கிறான். அவள் அதற்குச் சரியான பதில் சொல்லிக் கொண்டு வருகிறாள். முடிவில் உண்மையைச் சொல்லுகிறாள், வழியில் ஒரு காலிப்பயல் வம்பு செய்ததாக. அதைக் கேட்டு, குருவிக்காரன் கோபத்துடன் அவளையும் அழைத்துக் கொண்டு, அந்தக் காலிப்பயலைச் சந்தித்து, புத்தி புகட்ட போவதாகச் சொல்கிறான். இதுதான் காட்சி அமைப்பு” என்றார், பாடல் தன்னுடைய பாணியில் இருக்க வேண்டும் என்று சொன்னார். நான் “இது மிகவும் எளிதாயிற்றே. குற்றாலக் குறவஞ்சியில் வரும் சிங்கன் சிங்கிதானே”, என்றவுடன் N.S.K. என்னிடம் “தங்களுக்கு இலக்கியப் பயிற்சி உண்டா?” எனக் கேட்டார். எனக்கு இலக்கியப் பயிற்சி அளித்த பாபநாசம் ராஜகோபாலய்யர் அவர்கள், என்னுடைய மானசீக குரு உடுமலையார் அவர்கள், என்னுடைய வழிகாட்டிகள் காழி அருணாசலக் கவிராயர் (ராம நாடகம் எழுதியவர்) "நந்தனார்" சரிதம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார், சைவ சமய சமரச கீர்த்தனைகள் தந்த ஜட்ஜ் வேதநாயகம் பிள்ளை, பாபநாசம் சிவன், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் எனச் சொல்லி, அவரிடம் சில பாடல்களையும் பாடிக் காட்டினேன். என்னை உடனே N.S.K. அணைத்துக் கொண்டு, உடுமலை இருந்த இதயத்தில் உங்களுக்கு பாதியைக் கொடுத்து விட்டேன்.