பக்கம்:ஆண் சிங்கம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

பிள்ளை என்றே பெயர். யாரையும் மதிக்கமாட்டார். ‘அடி உதவுத மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் வே என்று அடிக்கடி சொல்லுவார். எசமான் குணம் வேலைக்காரனுக்குத் தெரியாதா!

ஸ்ரீவைகுண்டத்தில் வண்டி பூட்டும் போதே இரவு பத்து மணி ஆகிவிட்டது. எவ்வளவு போனலும் பன்னிரண்டு மணிக்கு முந்தி வீடு போய்ச் சேரமுடியாது. சாம வேளையிலே சாலைக்கரையான் பூமியில் போகவா? அதிலும் அன்று!

அன்றைக்கு அமாவாசை, தை அமாவாசை, அத்துடன் செவ்வாய்க்கிழமை–தலைச் செவ்வாயும் கூடிக் கொண்டது. இது சாமிகளுக்கு உகந்த உக்கிர மான நாளு என்று அவன் கேள்விப் பட்டிருக்கிறான். வேறு எந்த வண்டியாக இருந்தாலும்கூட அவன் இவ்வளவு கலவரம் அடையமாட்டான்.

இன்ஸ்பெக்டர் எசமான் சாமியைச் சாமின்னு மதியாமல் எக்காளம் கொழிச்சிட்டாக. அதிலும் வாறபோது வேறே அகங்காரமா... ‘ஏ மாடசாமி, இதுதானே நீ சொன்ன பூடம்! எல்லாப் பூடங்களையும் போல செங்கல்லும் மண்ணுமாகத்தானே இருக்கு. இது என்ன சக்திவாய்ந்த சாமியோ புரியலே. ஏம்பா மாடசாமி! இந்தப் பக்கத்தி லேதான் முழத்துக்கு மூணு, பூடம்: சானுக்கு ஒரு சாமி யின்னுயிருக்குதே, இதையெல்லாம் கண்டு பயப் படனும்னு சொன்னா, மனிசன் வீட்டை விட்டே வெளியே வரப்படாது. தெரியுதா? பூடம் தெரியாமச் சாமி ஆடுகிறது என்பாக. நான் சொல்லுதேன். ஆசாமியைக் கவனிச்சுக்கிட்டுத்தான் சாமியும் ஆட்ட பாட்டம் பண்ணும். ஐயாப் பிள்ளையிடம் எந்தச் சாமியும் வாலாட்டமுடியாது’ என்றாக. இப்படியா பேசுறது? அவன் அதை மறக்க முடியுமா?

அப்போதுதான் வண்டி ஆலமரத்தடியில்–பந்தல் வளைவுபோல் அடர்ந்து நின்ற கிளைகளின் அடியில் ஊர்ந்து கொண்டிருந்தது. ‘பகடக பகு பக்’ என்று ஒசை கேட்டது. ரொம்பத் தெளிவாக, யாரோ ஏளனச் சிரிப்பு சிரிப்பது போல், ஒலித்தது.

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/14&oldid=1071121" இலிருந்து மீள்விக்கப்பட்டது