பக்கம்:ஆண் சிங்கம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண் சிங்கம்


தானிருந்தது. தேகத்தில் அங்குமிங்கும் அரிப்பும், கழுத்துப் பக்கத்திலும் மூக்கோரத்திலும் கண் இமை கள் மீதும் வட்டங்களாகவும் புள்ளிகளாகவும் பற்று வருவது போவதாகவும் இருந்தன.

அவனைக் கடிக்காத வேளைகளில்கூட. சிதம்பரத்தின் மனம் சிலந்திப் பூச்சிகளைத் தேடித் திரிந்தது. அவன் நினைவு அந்தப் பூச்சியைச் சுற்றியே வலை பரப்பியது. எங்கோ எப்போதோ படித்ததன் நினைவு அவன் தூக்கத்திலே கனவாய், பயங்கரமாய் நிழலாடுவது முண்டு.

–ஆப்பிரிக்காவிலோ, அல்லது வேறு எங்கோ, ஒருவகைச் சிலந்தி உண்டு. மனிதர் கீழே படுத்துத் தூங்கும்போது அந்தப் பூச்சி வந்து அவர்கள் தலைமீது ஊர்ந்து, மயிர் முழுவதையும் கத்திரித்துவிடும். அது ஆப்படிச் செய்வது, படுத்துத் தூங்குகிறவனுக்குத் தெரியாது. அவன் விழித்தெழுந்த பிறகு தான் தன்து தலை மொட்டையாகியிருப்பதை உணர முடியும்.

இதை_அவன் ஒரு பத்திரிகையில் படித்தது முதல் இச் செய்தியால் பித்துற்றான். அந்த ரகச் சிலந்தி மனிதர் தலைமுடியை மட்டும் தான் கத்திரிக்குமா; அல்லது. மயிர் அடர்ந்த உடல் பெற்ற பிராணிகள் மீதும் ஊர்ந்து தனது வேலையைக் காட்டுமா? அவன் அறிவு இவ்வாறு குரல் கொடுத்தாலும் கூட, இச் சந்தேகத்தை விட அவனது விசித்திர உணர்வே அதிக வலிமை பெற்று மேலோங்கியது.

தூக்கத்தில் அவன் கை தலையைத் தடவிப் பார்த்துக் கொள்ளும். இரவில் இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் – வேளைகெட்ட வேளைகளில் எல்லாம்–விந்தைச் சிலந்தி அவனது அடர்ந்த கரிய தலை முடியினூடே புகுந்து விளையாடுவது போன்ற உணர்வு பெற்று அவன் திடுக்கிட்டு எழுவான். மயிர் கொட்டி விடவும், மண்டையில் அங்கங்கே சொட்டை விழுந்து விகாரத் தோற்றம் பெற்றுவிட்டது போல் அவனுக்குப் படும். உடனே விளக்கை ஏற்றி, கண்ணாடி முன் நின்று ஆராய்ச்சி செய்வான் அவன்.

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/81&oldid=1072846" இலிருந்து மீள்விக்கப்பட்டது