பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கோயில்களில் உள்ள ஆரிய இடைத் தரகர்களை அகற்றுக

ல்லாம் வல்ல ஓர் இறைப் பேராற்றல் இவ் வனைத்து உலகங்களையும் கட்டியாண்டு கொண்டிருப்பதை அறிவியலும் மறுத்ததில்லை. அவ்வாற்றல் கல், மண் என்ற வேற்றுமையின்றி, அனைத்துக் குற்றுயிர்களிலும் சிற்றுயிர்களிலும் ஊடுருவி, யாவற்றையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதையும் உள்ளொளி சான்ற எவரும் மறுக்க முடியாது. அவ்வாற்றலே அறிவாயும் அறியப் பெறும் பொருளாயும் புடைபெயர்ச்சி மாறி, அதுவதுவாய் இப் பேரண்டங்கள் அனைத்திலும் நின்று இயங்கியும் இயங்குவித்தும் வருவதை உளத்தாலும் உணரலாம்; அறிவாலும் அறியலாம். இல்லை என்றாலும் அதுதான்; உண்டு என்றாலும் அதுதான். இவ்வாற்றலை அது என்னலாம்; அவன் என்னலாம்; அவள் என்னலாம். சொற்களாயும், சொற்படு பொருள்களாயும், பொருளுறு வடிவங்களாயும், வடிவமை குணங்களாயும், பன்னூறாயிரம் வேற்றுமை மாற்றங்களால் இயங்குவனவாயும் உள்ள அம் மெய்ப்பெரும் பரம்பொருளை எனது என்றும் உனது என்றும் வகுப்பவனும், வகுத்துப் பேசுபவனும் கல்லாத மூடனாகவோ, கற்றறிந்த பேதையாகவோ, அன்றி வல்லடி வழக்கனாகவோதான் இருத்தல் வேண்டும். உலகத்துப் பொருள்களையே எனது உனது என்று பேசுதல் அறியாமை யாகின்ற பொழுது, உலகப் பொருள்களை யெல்லாம் உள்ளடக்கிக்கொண்டு கிடக்கும் ஓர் ஆற்றலை, மெய்ப்பொருளை,