பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

119


என்னுடையது என்றும், உன்னுடையது என்றும் பேசும் அறிவிலிகள் எச்சமயத்தைச் சார்ந்தவராயினும் அவர்கள் உலக வியக்கத்திற்கு மாறுபட்டவரே யாவர்.

இம் மெய்ப்பொருளுக்குக் கோயில் தேவையில்லை; கோலங்களும் தேவையில்லை. இவ்வுலகமே, ஏன் இப் புடவியே(பிரபஞ்சமே) அதன் திருக்கோயில், இவ்வுலகப் பொருள்களே அதன் திருக்கோலங்கள். அறிவறிந்த மெய்யறிவோனுக்கு மலமும் சந்தனமும் ஒன்றுதான்; மண்ணும் பொன்னும் ஒன்றுதான்; இலையும் பூவும் ஒன்றுதான்; அஃதாவது ஒரே மதிப்புடையவைதாம். ஆனாலும் அறிவறியாப் பொது மாந்தர்க்குக் கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. இந்தக் கற்பிதங்கள்தாம் பொருள்களாயும் அவற்றின் வேறுபாடுகளாயும் உலகத்தில் நின்று நிலவுகின்றன. கற்பித அறிவையே சமய நூலார் மாயையாக உருவகித்துள்ளனர். கற்பிதம் என்பது ஒன்றை ஒன்றாகக் கருதிக் கொள்வது. தாயை முதற்கடவுள் என்பதும், தந்தையும் அவர்போல் உள்ள பெரியோரும் வணங்கப் பெறுவதும் இக்கற்பிதத்தின்பாற் படுவனேயாம். மெய்ப்பொருளியலை எந்த இங்கர்சாலாலும், மார்க்சாலும், பெர்ட்ரண்டு ரசலாலும், ஓமரினாலும், சின் மெசிலியராலும் மறுத்துவிட முடியாது. அறிவியற் பேராசிரியர்களான நியூட்டன், எடிசன், ஐன்சுடைன் ஆகியோரும் இறையாற்றலை ஒப்புகின்றனர். அறிவியல் உணர்ந்த எவனும் மெய்யறிவியலை ஒப்புக்கொண்டுதான் ஆதல் வேண்டும். அறிவியல் அடிப்படையை உணராதவனே இறைப்பேராற்றலை மறுக்கின்றான். இவ்விடத்து நம் நாட்டில் பரப்பப் பெற்றுள்ள கற்பிதப் பூசல்கள் நிறைந்த ஆரியச் சமயப் போலித்தனங்களையும் உணர்ந்தே கூறுகின்றோம்.

ஆனால் மெய்யறிவியலும், உலகியற் கற்பிதங்களும் எந்தச் சமயத்திற்கோ, எந்த ஒரு சமயக் குரவர்க்கோ உடைமைகள் அல்ல. இன்று உலகில் உள்ள மதங்கள் யாவும் உலகியற் பொருள்களைப் போன்ற கற்பிதங்களே! இம் மதத்தில்தான் உண்மையிருக்கின்றது. இதில் இல்லை; என்று பேசுபவன், ‘கதிரவன் என் நாட்டில்தான் இருக்கின்றது; வேறெந்த நாட்டிலும் இல்லை’ என்று பேசும் பேதையைப் போன்றவனே யாவான். மதக் கற்பிதங்கள் குல வேறுபாடுகளைப் போல் பூசல்களை விளைவிப்பவையே யாகும். குலங்களில் எவ்வாறு உயர்வு தாழ்வு கற்பிக்கப்பெற்றதோ, அவ்வாறே மதங்களிலும் உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பெற்றன. கற்பனை என்பதும் ஒருவகை உண்மையே. இல்லாத ஒன்றை எவரும் கற்பனை செய்துவிட முடியாது. கற்பனை செய்தவை யாவும் நமக்கு உகந்தவையாக விருக்கலாம்; உண்மையாகவும் இருக்கலாம். ஆனால்