பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


கருத்து எதுவாக இருக்கலாம் என்று நாம் ஆராய்ந்து கொண்டிருக்க விரும்பவில்லை என்றாலும், அவர் பேச்சில், தமிழ்மொழி ஆராய்ச்சியறிவை அவர் எவ்வளவு குறைவாகவும், இழிவாகவும் மதிப்பிட்டிருக்கின்றார் என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

பொதுவாகவே, நம் அமைச்சர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் ஒருவகைப் பற்றும் ஆர்வமும் கொண்டிருப்பதாகப் பேசுகிறார்களே தவிர, போதிய அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. முதலில் அவர்கள் பேசுகிற பேச்சும், எழுதுகிற எழுத்தும் தூய தமிழாக இருப்பதில்லை. பொதுமக்களுக்கு விளங்குகிற வகையில் தாங்கள் பேசுவதாகவும், எழுதுவதாகவும் கூறிக்கொண்டு, கலப்புத்தமிழுக்கே ஆக்கந் தருகிறார்களே தவிர, அவர்களுள் ஒருவராகிலும் தூயதமிழ் வளர்ச்சியைப் பற்றிக் கருதுவதாகவே தெரியவில்லை. தங்களுடைய சிலைகளையும், தங்கள் தலைவர்களுடைய சிலைகளையும் வைப்பதில் அவர்கள் காட்டுகின்ற அக்கறையிலும் ஆர்வத்திலும், அவற்றிற்காகச் செலவழிப்பதிலும் நூற்றில் ஒரு பங்கையேனும் தமிழ்மொழி வளர்ச்சிக்காகச் செலவிடுவார்களானால், இந்நேரம் தமிழ்மொழி எத்துணையோ அளவுக்கு உயர்த்தப் பெற்றிருக்கும். அந்நிலை நமக்கும் பெருமை தருவதாகவிருக்கும். பெரும்பாலும் நம் அமைச்சர்களும் அவற்றின் கட்சிக்காரர்களும், அவர்கள் நடத்துகின்ற இதழ்களிலும் எழுதுகின்ற நூல்களிலும் தூயதமிழையே கையாளுவதில்லை. இவர்களைக் கருத்தில் கொண்டு நம் நாட்டில் நடக்கின்ற பார்ப்பன ஏடுகளும் வேண்டுமென்றே நல்ல தமிழைக் கெடுக்கின்ற நோக்கத்துடன் சரிபாதிக் கலப்புத் தமிழாகவே எழுதி வருகின்றன. நம் பேராசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் வெளியிடுகின்ற நூல்களிலும் மொழித் துய்மை பற்றி அக்கறை செலுத்துவதில்லை. நம் ஆட்சியாளர்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஏதோ பெரிதாகச் செய்து விட்டதுபோல் பறைசாற்றுகிறார்களே தவிர, வடமொழியான சமசுக்கிருதத்திற்கும், இந்திக்கும் செலவிடுகின்ற தொகையிலும், அவற்றின் வளர்ச்சிக்குக் காட்டப்பெறுகின்ற அக்கறையிலும், பத்தில் ஒரு கூறேனும் செலவிட்டதாகச் சொல்லிக் கொள்ள முடியாது. இந்நிலையில் நம் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து, அறிஞர்களின் மனத்தை மிகவும் புண்படுத்துவதாகவே இருக்கின்றது. ஆராய்ச்சிக்கு வேண்டிய வாய்ப்புகளையும், ஏந்துகளையும் செவ்வனே செய்துதரக் கேட்பது, கிண்டலுக்கும் பகடிக்கும் உரியதாகக் கருதப்பட்டுப் புறக்கணிக்கக் கூடியதாகவிருப்பது, உண்மைத் தமிழ் நெஞ்சங்களைப் பெரிதும் வருத்துவதாக வுள்ளது.