பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


அவர்களும், “சமசுக்கிருத மொழியால்தான் இந்தியாவுக்கே பெருமை” என்று பாராட்டியதுடன், கட்சி வேறுபாடில்லாமல் வி.கே.ஆர்.வி. இராவ், பேரா. இரென் முகர்சி (இந்தியப் பொதுவுடைமைக் கட்சி), திரிதிப் சவுத்ரி, ஆல்டர், எச்.எம். பட்டேல் (சுதந்திரா) போன்ற நூற்றிருபது பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் சமசுக்கிருதத்திற்கு உரிய பெருமையை மீட்டுக்கொள்ள இந்திய அரசு எல்லா வகையிலும் உதவ வேண்டுமென்னும் நோக்கத்துடன் இந்திராவிடம் ஒரு வேண்டுகோளைக் கொடுக்கத் துரண்டுகோலாகவும் இருந்தார். அதில், “அரசின் மும்மொழித் திட்டத்தில் இந்திய நாட்டின் பெரும்பாலான மொழிகளுக்கும் தாயான சமசுக்கிருதத்திற்கு இந்திய அரசு சிறப்பான ஓரிடத்தைத் தரவேண்டும்”. (Sanskrit, the mother of most Indian languages, should be given a special place in three language formula adopted by the govt.) — என்று கூறப் பெற்றிருந்தது.

மேலும், நடுவணரசுக் கல்வியமைச்சர் திரு. கரண்சிங் அவர்கள் சமசுக்கிருத வளர்ச்சியில் தனி நாட்டங்கொண்டு, “அறிவியல், பண்பாடு, இலக்கிய வளர்ச்சிக்கான மொழி சமசுக்கிருதமே" என்றும், “சமசுக்கிருதத்தைச் சரியான கண்ணோட்டத்துடன் பயன்படுத்தினால் அது நம்முடைய நாட்டின் இணைப்பு மொழியாகப் பெரிதும் தகுதியுடையது” என்றும், அக்கால் நடந்த அலகாபாது உலக சமசுக்கிருத மாநாட்டு அமைப்புக் கழகத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார். அந்த மாநாடும் தில்லியில் 1972–இல் நம் உலகத் தமிழ் மாநாடு போல் சீரும் சிறப்புமாக நடந்தது. ஆறு நாட்கள் நடந்த அம்மாநாட்டில் 35 அயல்நாடுகளிலிருந்தும் ஐநூற்றுக்கு மேற்பட்ட சமசுக்கிருத அறிஞர்கள் பங்குகொண்டனர். உருசியாவில் நடக்கும் சமசுக்கிருத ஆராய்ச்சிக்கும், டென்மார்க்கு, இசுக்காண்டிநேவியர் அறிஞர்கள் ஒத்துழைப்புடன், ஆரிய நாகரிகத்தைப் பறைசாற்றுவதாகக் கூறப்படும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பற்றியும், குறிப்பாக இரிக்கு வேத காலம் பற்றியும் மேற்கொள்ளப் பெறும் ஆராய்ச்சிக்கும், நடுவணரசுக் கண்காணிப்பும் இருந்து வருகின்றது. இவையன்றி, நைனிடாலில் ஆரிய சமாசத்தின் சார்பில் இவ்வாண்டு இறுதிக்குள் நான்கு வேத ஆங்கில வெளியீட்டு முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆரிய சமாசத்திற்கு உலகின் பதினான்குக்கு மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. காஞ்சியில் உள்ள காமகோடி பீடம் இவ்வகையிலும், வேத புராண ஆரியக் கருத்துகளைப் பரப்பும் வகையிலும், ‘வேத ரட்சண நிதிக்குழு’ என்னும் ஒரு குழு போன்ற