பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

149


பல மொழி, இனக் காப்புக் குழுக்களை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் நேரடியாக ஓரிலக்க உருபாவையும், மறைமுகமாகப் பல இலக்க உருபாவையும் செலவிட்டு வருகின்றது. இவ்வகையில், இங்குள்ள சமசுக்கிருதக் கல்வி மடங்களும் பிற மத நிறுவனங்களும் மிகவும் ஒத்துழைப்புக் காட்டி வருகின்றதைப் பலர் அறிந்திருக்க வழியில்லை. இன்னும் இது போல் பல நிலைகளையும் நாம் புள்ளி விளத்தத்துடன் எடுத்துக்காட்டுதல் இயலும், ஆனால், இவையனைத்தும் நம் தமிழ் மக்களுக்கு ஒர் எள்ளத்துணை உணர்வையோ, ஓர் இம்மியளவு முயற்சியையோ உண்டாக்கிவிடப் போவதில்லை என்பதும் நமக்குத் தெரியும். அவ்வாறு முயற்சி செய்து வருவோர் அங்குமிங்குமாக ஒருசிலர் இருந்தாலும் அவர்களுடைய அறிவையும், முயற்சியையும் குறைத்து மதிப்பிடவும், குறைகறித் திரியவுமே இங்குப் பலர் இருக்கின்றனர். அவர்களுடைய ஏசல் இழிவுகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு, மொழிக்காகவும், இனத்திற்காகவும், பண்பாட்டிற்காகவும், பொறுக்கித் தின்னுதற்கன்றி, உண்மையாக உழைக்கின்ற ஒரிருவர் முயற்சிகளையும், நம் கல்வியமைச்சர் போன்றவர்கள், ஏதோ தம் வீட்டுச் சொத்தை எடுத்தெடுத்துக் கொடுத்துக் கை சிவந்தவர்போல், மனச் சலிப்போடும், வாய்ச் சலிப்போடும், கிண்டலும் பகடியும் செய்யத் தொடங்கிப் புறக்கணித்துவிட்டால், தமிழ்தான் எப்படி வளரும்? தமிழன்தான் எப்படி இனவுணர்ச்சி பெறுவான்? தமிழ்நாடுதான் என்றைக்குத் தன் அடிமைத்தனத்தை நீக்கிக்கொண்டு, உரிமையுடன் தலைநிமிரும்.

பார்ப்பன இனம்போல் நம் இனம் முன்னேறாமைக்குக் கரணியம் பார்ப்பனர்களல்லர்; நம்மவர்களேதாம்! அவர்களைப் போல மொழியுணர்வும், இனவுணர்வும் நம்மிடம் என்றும் இருந்ததில்லை. உண்மை முயற்சியுள்ளவர்களை ஊக்கப்படுத்திக் கைகொடுத்துக் கரையேற்றும் போக்கு நம்மிடம் மலர இன்னும் பல நூறு ஆண்டுகள் போகவேண்டும். கோழைகளாகவும், மோழைகளாகவும், ஏழைகளாகவும் நலிந்தும், மெலிந்தும் கிடக்கும் நம் இனத்தில், தப்பித் தவறித் தலைதூக்கும் ஓரிருவரையும், தலையில் மிதித்துச் சேற்றில் அழுத்தினால், நாம் இன்று நட்டுவைக்கும் நடுத்தெருச் சிலைகளும் எழுதிவைக்கும் வரலாறுமே நம்மைப் பார்த்து நாளைக்குக் கையொட்டிச் சிரிக்கும். விளம்பர வேடிக்கைக்காரர்களன்றி, நல்லவுள்ளம் படைத்த நடுநிலையாளர்களை எண்ணிப் பார்க்க வேண்டிக் கொள்கின்றேன்.

–தமிழ்ச்சிட்டு, குரல் : 8, இசை 8–10, 1975