பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

159


எண்ணிக்கையுள்ள பல்கலைக் கழகங்களில் மட்டும் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்க வேண்டும்? திரவிடர்கள் நடுவணரசுத் தலைமையைக் கைப்பற்ற முடியாமல் இருக்கும் சூழ்ச்சி மிகுந்த அரசியல் அமைப்பை வைத்துக் கொண்டு பிராமணியம் அரசாளும் உண்மையை இது தெரிவிக்க வில்லையா?

இன்னும் இந்திய மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஆரியப் பார்ப்பனரின் மொழியாகிய சமசுக்கிருதத்தைப் பேசுபவரின் மொத்த தொகையே அரசு மக்கள் தொகை மதிப்பீட்டுக் கணக்கின்படி 500 பேராக இருக்க, பிற தேசிய மொழிகளுக்குள்ள உரிமையைப்போல் அச் சமசுக்கிருத மொழியில், வானொலியில் செய்தி அறிக்கைகள் படிப்பதும், நாடகங்கள் நடிப்பதும், பாடல்கள் பாடுவதும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள், கதைப்பொழிவுகள், உரையாடல்கள் நிகழ்த்துவதும் எப்படிப் பிராமணிய வளர்ச்சிக்குத் துணைபோகாத – அல்லது அவ்வினக் காவலுக்கு உதவாத செயல்களாகும்? இது பச்சைப் பார்ப்பனீயக் கொடுமைகள் அல்லவா? பெரும்பான்மை மொழியினர் நலத்தை நசுக்கி ஒரு சிறுபான்மையினரின் வளர்ச்சிக்குத்துணைபோகின்ற அரசின் இரண்டகச் செயல் அல்லாமல் இதை வேறு என்னவென்று சொல்ல முடியும் மிகச் சிறுபான்மையுள்ள பார்ப்பனரிலும் சமசுக்கிருதம் நன்கு படித்த ஒரு சிலருக்குத்தானே இந்நிகழ்ச்சிகள் புரியும்! ஓர் இரண்டு நூறு பேர்களுக்காக, கோடிக்கணக்கான மற்ற மக்களின் உரிமை பறிக்கப்பட வேண்டுமா? இஃது என்ன நேர்மை? என்ன நடுநிலைமை?

இந்த நிலையில் “பள்ளிகளில் சமசுக்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்” என்று வேறு, கடந்த சனவரியில் சென்னையில் கூடிய சமசுக்கிருத சம்மேளனம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கு அச் ‘சம்மேளனம்’ கூறும் கரணியங்கள்தாம் எத்துணைப் பொய்யும், புளுகும், குறும்புத்தனமும் பிற மொழியாளரை அவமதிக்கும் தன்மையும் வாய்ந்தனவாக உள்ளன! அம்மாநாட்டில் கூறிய கருத்துரைகளையும் தீர்மானங்களையும், தமிழ்ப் பற்றாளர்களும் தமிழ்த் தலைவர்களும், கண்ணுற வேண்டும் என்பதற்காக அச்செய்தி அப்படியே திருத்தமின்றிக் கீழே கொடுக்கப் பெறுகிறது:– (தினமணி – சென்னை – சனவரி – 2)

“ஹிந்தி பிரசார சபையைப் போல ஸ்ம்ஸ்கிருத பிரசார சபை ஒன்று பல்கலைக் கழக அந்தஸ்தில் அமைந்தால்தான் தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் பரவ முடியும்.. அதற்கு மத்திய சர்க்கார் ஆவன செய்ய வேண்டும்... சம்ஸ்கிருதம் படித்த மாணவர்கள் மற்ற மாணவர்களைவிடக் கெட்டிக்காரர்களாகவும்