பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

161


அவ்வினமும், அவ்வினத்தைப் பற்றி வளரும் கலைகளும் பண்பாடும் பிற அறிவுக்கூறுகளும் படிப்படியாகவும் ஆனால் விரைந்தும் அழிந்துவிடும்” என்னும் இயற்கைக் கோட்பாடே, சமசுக்கிருத மொழி நிலையிலும் உண்மையாகச் செயற்படும் என்பது, பிராமணர்களுக்கு தமிழினத்தவர்களைவிட நன்கு தெரியும். இவ்வகையிலேயே வடநாட்டவர்களான ஆரியப் பார்ப்பனர்களும் தங்கள் ஆட்சியதிகாரங்களை நிலைப்படுத்தும் முயற்சியாக, இந்தியை இந்நாட்டின் ஆட்சிமொழி யாகவும் இணைப்பு மொழியாகவும் ஆக்குவதில் பெரிதும் முனைப்பும் பரபரப்பும் காட்டுகின்றனர். இவ்வுண்மையைத் தமிழர்கள் நன்கு விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

இந்திமொழி சமசுக்கிருத அடிப்படை கொண்டது. எனவே அதன் வளர்ச்சி சமசுக்கிருத ஆக்கத்திற்கு ஒருவகைத் துணையாக நிற்கும் என்பதைப் பிராமணர்கள் உணர்ந்திருக்கின்றனர். இந்தியை ஆட்சி மொழியளவில் இந்நாட்டின் அதிகார மொழியாக நிலைப்படுத்திவிட்டால், அதன் வேராக நின்று சமசுக்கிருதம் இயங்கும் அல்லது இயக்கும் என்பதையும் அவர்கள் நன்கு உணர்வர். எனவேதான் சமசுக்கிருத வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொள்ளும் பிராமணர்கள் இந்தி நுழைவிலும் ஓரளவு அக்கறை காட்டி வருகின்றனர். வடநாட்டினரின் இந்திமொழி வளர்ச்சியையும், சமசுக்கிருத மொழி எழுச்சியையும் தடுத்து நிறுத்தும் ஆற்றல், திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ்மொழிக்கே உண்டு. மற்றைய அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் சமசுக்கிருதம் புறக்கணிக்கப்படும் ஒரு மொழியன்று. சமசுக்கிருதத்தை விடுத்து அம்மொழிகள் ஒருபோதும் தம்மளவில் நின்று தனித்தியங்கா; உயிரும் வாழா, தமிழ்மொழியின் நிலை அவ்வாறானது அன்று. சமசுக்கிருத மொழியின் கூட்டுறவை எவ்வளவுக் கெவ்வளவு அது தவிர்க்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு தன்னளவில் நின்று தனித்து வளர்ந்து செழிக்கும் தன்மையுடையது. சமசுக்கிருத மொழித் தொடர்பே தமிழ்மொழியின் தனித்தன்மையையும், அதன் அறிவு வளத்தையும் வளர்ச்சியையும் கெடுக்க வல்லது. எனவே மற்றைய திராவிட மொழிகளான மலையாளம், தெலுங்கம், கன்னடம், துளுவம் முதலிய மொழிகள் சமசுக்கிருதத் தொடர்பை ஒரு காலத்தேனும் விட்டுவிடும், அல்லது தளர்த்திக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அவ்வாறு செய்வது அவற்றின் தற்கொலை முயற்சியாகவே இருக்கும். மேலும் சமசுக்கிருத மொழியின் தொடர்பை அவை கைவிடக் கைவிட அவற்றின் தாய்மொழியாகிய தமிழ்மொழிக்கு அவை மிக நெருக்கமான மொழிகளாகிவிடும். இன்னுஞ் சொன்னால், அவை தமிழாகவும் ஆகிவிடும். அக்கால் அவற்றின் சொற்களில் மட்டும் இடச்சிதைவும், காலச்சிதைவும், வரலாற்றுச் சிதைவும் நன்கு புலப்படும்படி இருக்கும்.