பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

165


பெரும்பாலானவற்றில் இந்தியாவின் 14 தேசிய மொழிகளுள் ஒன்றிரண்டையோ மூன்று நான்கையோ கற்கும் வாய்ப்புகள் உள்ளன. சில குறிப்பிட்ட பல்கலைக் கழகங்களில் சில குறிப்பிட்ட மொழிகளைக் கற்கலாம்’ அனைத்து மொழிகளையும் ஒரே பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவது என்பது அத்துணை எளிதன்று. எனவே சில பல்கலைக் கழகங்கள் குறிப்பிட்ட சில மொழிகளைக் கற்பிப்பனவாய் உள்ளன. இணைப்பு மொழியாகக் கருதப்படும் இந்திமொழியை ஏறத்தாழ 70 பல்கலைக் கழகங்கள் கற்பிக்கின்றன. பஞ்சாபி மொழியில் படிக்க 3 அல்லது 6 பல்கலைக் கழகங்களில் தான் இயலும். அசாமி 2, 3–இல் கற்பிக்கப்பெறுகிறது. இந்தியை ஓரிரண்டு பல்கலைக் கழகத்தில்தான் கற்கலாம். உருது மொழியை ஏறத்தாழ 30 ப.க.க.–இல் படிக்கலாம். தமிழ் மொழியை 12 அல்லது 13 பல்கலைக் கழகங்களில்தான் கற்கலாம். இப்படி இந்தி, உருது, மராத்தி, வங்காளி, குசராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஒரியா, மலையாளம், அசாமி, சிந்தி ஆகிய 14 தேசிய மொழிகளையும் பலவாறான அளவில் பல்வேறு எண்ணிக்கையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும் இந் நடுவணரசு தேசிய மொழியல்லாத, ஏறத்தாழ 500 பேர் மட்டுமே பேசுவதாகவும், 5000 பேர்க்கு மட்டுமே தெரிந்ததாகவும் குறிக்கப்பட்டுள்ள சமசுக்கிருத மொழியைக் கற்றுக்கொள்ள மட்டும் ஏறத்தாழ 80, 82 பல்கலைக் கழகங்களில் வாய்ப்பளிப்பது ஏன்? அதன் முன்னேற்றத்திற்கு மட்டும் மக்களில் 97 விழுக்காட்டினர் தரும் வரிப்பணத்தில் தாராளமாக வாரி வழங்கப்படுவது ஏன்? இவ்வினாவிற்கான விடையில்தான் பிராமணியம் மறைமுகமாக இந்நாட்டை ஆண்டு வருகின்றது என்பதற்கான அடிப்படை உண்மையைக் காணமுடியும்! மற்றபடி அது பேராயக் கட்சி என்று பெயர் பெறலாம்; இந்திரா கட்சி எனப் பெறலாம்; பொதுவுடைமைக் கட்சி என்றுகூடச் சொல்லப்பெறலாம்; இல்லை அனைத்துக் கட்சிகளின் அவியலைப் போலும் ‘சனதா’ என்றும் மாற்றம் பெறலாம். பெயர்கள் என்னவானாலும் இந்தியாவைப் பொறுத்தவரை, அதனை ஆளக்கூடிய தகுதி வாய்ந்ததாகவும், வாய்ப்பு:நிறைந்ததாகவும், பிற அனைத்து இன மக்களைத் தன் காலடியில் போட்டு நசுக்கத் தக்க சாதி, மதக் கோட்பாடுகளைக் கொண்டதும், அவற்றுக்கடிப்படையான வேத, புராண, இதிகாச மூடமந்திரப் புளூகு மூட்டைகளைப் பின்புலமாகக் கொண்டதுமான பிராமணீயம் என்னும் சரக்கு ஒன்றே என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

– தென்மொழி, சுவடி : 14, ஓலை : 10–12, 1977