பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

பெரிய அளவில் இறந்துபோனவர்களின் படம், வரலாறு, அவர்களின் பண்பு நலன்கள் ஆகிய அனைத்து விளக்கங்களுடனும், அவர்களின் இழவால் இந்நாட்டுக்கோ, கலைக்கோ ஏதோ நேரமுடியாத இழப்பு ஏற்பட்டுவிட்டது போலவும் இட்டுக்கட்டி - பூனையை யானையாக்கிச் செய்தி வரும். ஆனால் தமிழினத் தலைவர்களில் பாவேந்தர் பாரதிதாசனைப் போன்றவர்கள் மறைந்து போனாலும் எங்கோ ஒரு மூலையில் ஓரிரண்டு வரிகளில்தான் அவற்றில் செய்தி போடுவார்கள்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் பாளையங்கோட்டையில் உள்ள பார்ப்பனப் பேராசிரியர் ஒருவர் அடிபட்ட செய்தி பார்ப்பன இதழ்களில் நாள் தவறாமல் பெரிதுபடுத்தி எழுதப்பெற்று, அல்லோல கல்லோலப்படுத்தப் பெற்றது. அதன் கரணியமாகப் பல கல்லூரிகளும் மூடப்பெற்றுக் குழப்பங்கள் விளைந்தன. அதுவுமன்றி, அண்மையில் முழுக்க முழுக்கத் தமிழர்களாகவே உள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. தங்கள் நெடுநாளைய விருப்பப்படியும் வடவர் செய்த இரண்டகச் செயல்களின்படியும் இரண்டாக உடைந்ததைப் பயன்படுத்தி எதிர்ப்பாளராகிய ம.கோ. இராவிற்கு இவர்கள் தரும் விளம்பரங்களும், அவர் கருத்தைப் பெரிதுபடுத்திப் பொதுமக்களுக்குத் தி.மு.க.வின் மேல் வெறுப்புண்டாகும்படி செய்யும் முயற்சிகளும் மேலே கூறிய கருத்துரைகளை மெய்ப்பிக்கப் போதுமான சான்றுகளாகும். சூத்திரர்கள் ஆட்சியில் பிராமணர்கள் வாழக்கூடாது என்பதும், அவ்வாட்சியைத் திட்டமிட்டுக் கவிழ்த்தல் வேண்டும் என்பதும் இவர்களின் வேத, புராணங்கள் பறைசாற்றுங் கொள்கை. அக்கொள்கை இவ்விருபதாம் நூற்றாண்டிலும் இவர்களை விட்டுப் போனதாகத் தெரியவில்லை.

அண்மையில் இராசாசி இறந்துபோனதை ‘ராஜாஜி அமரரனார்’ என்று தினமணி தலைப்பிட்டு எழுதியதுடன் அந்த (26.12.1972) நாளில் வந்த இதழின் எட்டுப்பக்கங்களிலும் அவர்களுடைய தலைவரைப் பற்றிய செய்தியே நிறைந்திருந்தது. அவரை என்னென்ன சொற்களைக் கொண்டு புகழ முடியுமோ, எவ்வெவ்வகையில் அவர்க்கு உயர்ச்சி காட்ட முடியுமோ, அவ்வச் சொற்களால் அவ்வவ் வகையிலெல்லாம் வானளாவப் புகழ்ந்து தள்ளியிருந்தது தினமணி. ‘மாமலை சாய்ந்தது’ என்னும் தலைப்பிட்டுத் தினமணிச் சிவராமன் எழுதிய அன்றைய ஆசிரியவுரையைப்