பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பார்ப்பன எழுச்சியும் திராவிடர் கழகத்தின் முனைப்பும் விரும்புகின்ற விளைவுகளும்!

திராவிடர் கழகத்திற்குச் சில வலிவான கொள்கைகள் உண்டு. திராவிட இனக் காப்பு, சாதி, மத, மூட நம்பிக்கை முதலியன ஒழிப்பு, தமிழின நலமீட்பு, தமிழ்நாடு விடுவிப்பு முதலியவை அவை. இவற்றுள் தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையை அக் கழகம் பெரியாருக்குப் பின் கைவிட்டுவிட்டதாக அறிவித்தது. மற்ற கொள்கைகளில் அது முழு அளவில் செயல்பட்டு வருகிறது. இது பின்பற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது பெரும்பாலும் இந்து மதம் என்னும் வேதமதக் கருத்துகளை முன் வைத்ததான ஒரு கொள்கை மற்றபடி, அறிவியலுக்கு மிகப் பொருந்துவதான மெய்ப்பொருள் கொள்கையில் அவர்கள் அதிகம். கருத்துச் செலுத்துவதில்லை என்பதைத் தவிர, வேறு எதிரான கொள்கையை அது கொண்டிருப்பதாகச் சொல்வதற்கில்லை. அது தவிர, தமிழ்மொழி நலன் பற்றிய கூறுகளிலும் அவர்கள் மிகுந்த நாட்டம் கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட ஓரிரு கருத்து வேறுபாடுகளைத் தவிர, நமக்கும் அக்கட்சியினர்க்கும் பெருத்த மாறுபாடுகள் வேறு. இருப்பனவாக நாம் கருதுவதற்கில்லை. எனவே இப்பொழுதுள்ள கால நிலையில், தமிழர்கள் தங்களுக்குள் மாறுபாடான கருத்துக்கள் எவை யெவை என்பதை ஆராய்ந்து அலசிப் பார்த்துக் கிண்டிக் கிளறிக் கொண்டிருப்பதைவிட, நாங்கள் ஒன்றுபடுவதற்குரிய அடிப்படைக் கருத்துகள் எவை என்பதைப் பற்றி எண்ணிப்பார்ப்பது இனநலத்துக் குகந்ததாக இருக்கும் என்று நாம் கருதுவதால், அதையொட்டிய சில எண்ணங்களை இங்குத் தெரிவிக்க முன்வந்துள்ளோம்.