பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

17

படித்தவர்கள் இந்தியாவில் உள்ள எல்லா நல்லறங்களும், நலன்களும் இராசாசியோடு பறிபோய்விட்டதாகவே உணர்வார்கள். ‘விடுதலை வீரர், அபார இராசதந்திரி, சிறந்த நிர்வாகி, தீண்டாமை ஒழிப்புக்கு வரிந்து கட்டிக்கொண்டு பாடுபட்ட தீரர், ஆன்மீக உயர்வினால் ராசரிசியாகத் திகழ்ந்தவர். ஏழைபங்காளர். குணநலன்களின் உறைவிடம், தலைசிறந்த பண்பினர், அறநெறியின் உருவம், சனநாயகத்தின் காவலன், சமாதானப் பிரியர், முன்னணி எழுத்தாளர், மாமேதை, பாரதப் பண்பின் உயர்நிலைகளை வாழ்ந்து காட்டியவர். இத்தகைய சிறப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து வேறு எவரிடமும் காணமுடியாது. அவர் தமது சாதனைகளால் யுக புருசர்கள் வரிசையில் இடம்பெறக் கூடியவர்’ – இவ்வாறு எழுதியது, தினமணி.

இங்குக் கூறப்பெற்ற புகழுரைகளுக்கு இராசாசி உரியவரா அல்லரா என்பதன்று நம் கேள்வி. இத்தகைய உரை இராசாசிக்காகத்தான் எழுதப்பெறும் என்பதன்று. பார்ப்பன இனத் தலைவராக உள்ள எவருக்கும் – காஞ்சி காமகோடிப் புதுப்பெரியவாள் மறைந்தாலும் அவருக்கும் எழுதப்பெறும் ஒரு வேட்கை உரையாகும். இராசாசி மறைந்தபொழுது திரு. ஈ.வெ. இரா அவரை ஒரு பெரியார் என்று சொன்னதற்காகவே ஈ.வெ. இராமசாமி நாய்க்கர் என்பதைத் தவிர வேறுவகையாக எழுதாத தினமணி அன்று ஈ.வெ. இராமசாமி பெரியார் என்று எழுதியிருந்ததை ஆழ்ந்து நோக்குவார்க்கு அவாளின் இன நலவுயர்ச்சி நோக்கம் விளங்காமல் போகாது. இராசாசி இருக்கும்பொழுது அவரின் அரசியல் கருத்துரைகளை ஒரு பொருட்டாகவே மதிக்காத தலைமை அமைச்சர் இந்திராகாந்திகூட, ‘அவர் ஒரு மேதை; சிக்கல்களை அலசி ஆராயும் திறனுள்ளவர்; அவர் பெரிய அரசதந்திரி என்றெல்லாம் புகழ்ந்துரைத்தார். அத்தகைய அறிவு வன்மையாளரின் அறிவுரைகளை அம்மையார் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது ஏனோ?

இத்தகைய நிகழ்ச்சிகளால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னெனின், பார்ப்பனர்களுக்கு வேண்டியதானால் துரும்பும் துரணாகும்; வேண்டாதெனில் தூனும் துரும்பென்று இழித்துரைக்கப் பெறும். அதற்கான ஆற்றல்கள் செய்தித்தாள் வன்மைகள் அவர்களிடம் உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது என்பது தான். அத்துடன் நாம் இன்னொன்றையும் மறந்துவிடக்கூடாது.