பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

195


ஏதோ ‘அர்த்தம்’ இருக்க வேண்டும்! எனவே அந்த மதத்தைப் போற்றுபவர்களைப் பற்றியோ அதுதான் உயர்ந்தது, சிறந்தது, மெய்யானது, உயிரானது, அழிவற்றது(அநாதி), தோற்றமும் முடிவுமற்றது(ஆதியந்தம் இல்லாதது) என்று சொல்பவர்களைப் பற்றியோ நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்கள், ஒன்றால், அந்த மதத்தால் தொடர்ந்து நன்மைகளைப் பெற்றுக்கொண்டு வரும் பார்ப்பனர்களாக இருத்தல் வேண்டும்; அன்றால், அத்தகைய பார்ப்பனர்களால் தாங்களும் ஏதோ சில நன்மைகளைப் பெற்றுவரும் ‘வீடண’, ‘சுக்கரீவ', ‘பிரகலாத’, ‘பக்தவத்சல', ‘சுப்பிரமண்ய', ‘சிவஞான கண்ணதாச', ‘அடியார்’களாக இருத்தல் வேண்டும். இந்த இருவகையான ஏமாற்றுக் கூட்டத்தினரைத் தவிர, இந்துமதம் புனிதமானது, உயர்ந்தது, சிறந்தது, ’அர்த்த’முள்ளது என்று அறிவுள்ள, தன்மானமுள்ள வேறு எவருமே சொல்ல மாட்டார்கள்.

மேலும் இவ் விருபதாம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக் காலத்தில், எந்த ஒரு தனிப்பட்ட மாந்தனுக்கும் மதம் என்னும் ஓர் இனவுறுப்பு தேவையே இல்லை. அதுவும் மிகமிக அருவருப்பானதும், உலகிலுள்ள மதங்கள் அனைத்தையும்விட மிகவும் இழிவானதுமான ‘இந்து’ மதமும் அது பெற்ற சாதியமைப்பு என்னும் கேடான ஒரு தீய அமைப்பும், இங்குள்ள எவர்க்கும் தேவையற்றவையே! இவை இல்லாமற் போனால் வாழ்க்கையில் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும் என்று அறிவியலடிப்படையில் எவரேனும் கூறி, மெய்ப்பித்துக் காட்ட முடியுமா? மதம் என்னும் அமைப்பு இல்லாவிட்டால் மக்களுக்கு எதில் இழப்பு ஏற்பட்டு விடும்? எந்த உறுப்பு ஓட்டையாகி விடும்? அப்படியே, எவருக்காகிலும் எந்த உறுப்பாவது ஓட்டையாகும் என்றால், அந்த ஓட்டையை அடைத்துக்கொள்ள வேண்டிய அவர்கள் வேண்டுமானால் அதைத் தனிப்பட்ட முறையில் அவர்கள் வீட்டிலோ, அல்லது பெட்டியிலோ, அல்லது சட்டைப் பையிலோ வைத்துக் கொண்டு பாராட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதானே! அவர்களின் ஓட்டைக்காக, அதை ஏன் மற்றவர்கள் தலையிலும் சுமத்த வேண்டும்? பேய்க் கனவு கண்டு அலறுகிறவன், எதற்கு ஊரிலுள்ள அத்தனைப் பேரையும் தன் வீட்டில் வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்று கூறவேண்டும்? இனி, அலறுகிறவன் ஆட்சியில் உள்ளவனாக இருந்தால் அதற்குச் சட்டமல்லவா போடுவான்? அஃது எப்படி அறிவுடைமையும், தனிமாந்தவுரிமைக்கு ஊறு விளைவிக்காதது ஆகும்.

இனி, மாந்த இனத்தின் மேம்பாடான மீமிசை வளர்ச்சிக்கும்,