பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

201

வலை. நாம் விரும்பாமலேயே வீழ்ந்து கிடக்கும் ஒரு படுசேற்றுப் பள்ளம். அதை ஒரு கடவுட்கட்சி என்றுங்கூட விளங்கிக் கொள்ளும்படி கூறலாம். இக்கால் உள்ள திரைப்படங்களுக்குள்ள கவர்ச்சியும் விளம்பர ஆரவாரங்களும் மதங்களுக்கு உண்டு. திரைப்படங்கள் மக்களமைப்பையே நஞ்சாக்கும் வகையில் வளர்ந்து சிறந்து வல்லமை பெற்றாலும், அவற்றை எப்படி ஒழித்துவிட முடியாதோ, அல்லது ஒழிப்பது எவ்வளவு கடினமோ, அப்படி மதங்களையும் ஒழித்துவிட முடியாது; அல்லது ஒழிப்பது அவ்வளவு கடினம். இன்னுஞ் சொன்னால், இக்காலத்து அரசியல் கட்சிகளைப் போன்றவையே மதங்களும், கட்சிகளை ஒழிக்க ஒழிக்க வேறொரு வடிவில் அவை வளர்ந்து கொண்டே வருவது போல், மதங்களும் ஒன்று ஒழிய அல்லது மறைய வேறொன்று தோன்றிக் கொண்டே வரும். இக்கால் புதுவிளம்பரங்கள் பெற்றுள்ள ஐயப்ப மதம், மூகாம்பிகை மதம் போன்ற புதுக் கடவுள் கட்சிகளை நோக்குகின்றவர்களுக்கு நாம் சொல்வதன் உண்மை விளங்கும்.

இத்தகைய மத அமைப்புகள்தாம் மக்களை முதன் முதலாக வேறு பிரித்தன. மத அமைப்புகளை ஒட்டியே சாதியமைப்புகள் வளர்ந்தன. அவையும் ஏற்கனவே மதங்களால் பிரிந்துகிடந்த மக்களை மேலும் வேறு பிரித்துப் பிளவுகளைப் பெரும் பள்ளங்களாக ஆக்கின. அவ்வாறு பிரிக்கப்பட்ட பல்வேறு மத, சாதிப் பிரிவுகளில் தங்களை உறுப்பாக்கிக் கொள்ளாத பல கோடி மக்கள் அந்தப் பிளவுகளிலும் பள்ளங்களிலுமே வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்டனர். மக்கள் நம்பிக்கையின் மேலும், மடமைகளின் மீதும் கட்டப்பட்ட மதங்கள் என்னும் இச் செயற்கைப் போலி அமைப்புகள், வலிந்த செல்வமும் ஆளுமையும் உள்ளவர்களின் கைகளில் சிக்கியவுடன், அவை மேலும் வலிவடைந்து, சட்டங்களாகவும், அரசுகளாகவும் உருவெடுத்தன. இந்த வகையில் மதங்கள் இவ் வுலகையே கட்டியாளுகின்ற வல்லமை பெற்றன. அதன்பின் மக்களின் எந்தவொரு தேவையும், மாறுதலும், இம் மதங்களை யொட்டியே சிந்திக்கப் பெற்றன; செயல்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் ஒரு சில கற்பனைக் கடவுள்களுக்காக உண்டாக்கப் பெற்ற மதங்கள், இவ்வாறு வலுப்பெற வலுப்பெற, பின்னர், புதுப்புதுக் கடவுள்களையே படைத்து வெளி விற்பனைக்கு அனுப்பும் பட்டறைகளாக மாறின. ஓர் உருவாக்கத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் பல பண்டங்களை விற்பனை செய்வதற்குரிய விற்பனைக் கூடங்கள் பல ஏற்படுவதைப் போல, புதிது புதிதாக உருவாகி வெளிவந்த கடவுள் மதங்களுக்கும் மடங்கள் போலும் மத வாணிகக் கூடங்கள் உருவாயின. கட்சி