பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

அலுவலகங்களைப் போல், அவையும் சட்டதிட்டங்களையும் நெறிமுறைகளையும் உருவாக்கின. அவ்வம் மதங்களின் பண, அதிகார, ஆட்சி வலிவுகளுக்கேற்ப, அச் சட்ட திட்டங்களும், நெறிமுறைகளும் மக்களைக் கட்டுப்படுத்தின; அவர்களைச் சிந்திக்க விடாமல் அறிவுப்போக்கிற்குத் தடையிட்டன. மன ஒருமையை வளரவிடாமல் மன வேறுபாடுகளை - தாழ்ச்சி உயர்ச்சிகளைக் கற்பித்தன, கடைப்பிடித்தன. மத வரலாற்று நூல்களில் இவற்றை நெடுகலும் பார்க்கலாம்.

இவ்வாறு வளர்ந்துவிட்ட உலக மதங்களுக்குள் இந்துமதம் என்பது, ஆரியப் பார்ப்பனர்களுக்காகவே வளர்த்துக் கொள்ளப்பட்ட, தூர் நிரம்பிய ஒரு மதமாகும். வேதமதம் என்னும் நச்சு விதையைச் சுற்றியுள்ள சதைப் பகுதியே இந்துமதம் ஆகும். இந்தச் சதைப் பகுதியை மூடியுள்ள தோல் மிகக் கவர்ச்சியுடைய வண்ணப் பூச்சுகள் கொண்டது; இவ்வண்ணப் பூச்சு ஒன்றினாலேயே மனம் மயங்கிப் போகும் படிக்காத ஏழைப் பொதுமக்கள் இந்நாட்டில் ஏராளம்! தோல் வண்ணத்தால் கவர்ச்சியுற்று, இதன் சதைப் பகுதியைச் சுவைப்பவர்களுக்கு ஏற்படும் மதிமயக்கமும், மதவெறியும் மிகுதி! அதன் இனிமையான இன்பவெறி நுகர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதென்பது அரிதினும் அரிது! ஆனால், அதையும் வேறு பிரித்துணர்ந்து, தன் ஆய்வறிவால், தான் யார், இவ்வுலகம் எது, தன் தோற்ற மாற்ற வாழ்வு வளர்ச்சிக்கு என்ன பொருள் - என்பவை பற்றியெல்லாம் பகுத்தறிவு வழியினும் மெய்யறிவு வழியினும் உய்த்துணர்ந்து கொண்டு, மேலே செல்பவர்கள்தாம் அவ்விந்து மதத்தின் நச்சுவிதையையும் அதன் தீய நோக்கங்களையும் நன்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்துமதத்தின் நச்சுவிதை அது போன்ற நச்சுத்தன்மை கொண்டவர்களுக்கு மட்டுமே வாழ்வளிக்கக் கூடியது. மற்ற அனைத்து மாந்தப் பிரிவினரையும் வேரறுத்து, அடியோடு அழித்தொழிக்க வல்லது. அந்த மூலவிதை எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடியது. எந்த மண்ணிலும் வளர்ந்து செழிக்கும் திறம் சான்றது. அது வேரூன்றிய நிலத்தின் அண்டை அயலில் வளர்ந்து படரும் செடிகொடிகள் அனைத்தையும் தனக்கு எருவாக்கிக் கொள்ளும் வலிமை பெற்றது. அதனால்தான் அந்த வேதமத நச்சுச் செடி, முன்னரே இந் நிலத்தில் பற்றிப் படர்ந்து வளர்ந்து செழித்திருந்த புத்தம், சமணம், உலகாயதம், சாருவாகம், சாங்கியம் முதலிய உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்ட மதங்களின் சாரங்களை யெல்லாம் முற்ற உறிஞ்சிக்கொண்டு, இந்துமதம் என்னும் பெயரில் இப்பொழுது வானளாவிச் செழித்து வளர்ந்துள்ளது. பொதுவாகவே ஆரியம்