பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
யார் பிரிவினைக்காரர்கள்?

மக்களைக் குலங் குலமாக, சாதி சாதியாகப்
பிரித்த நீங்களா? அல்லது, அவர்களை
ஒன்றுபடுத்த முயற்சி செய்யும் நாங்களா?

திருச்சி மாவட்ட உ.த.மு.க. தொடக்க விழாவில் பார்ப்பனர்களைப் பார்த்துப் பாவலரேறு கேள்வி.

1982ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் பக்கல், திருச்சிராப்பள்ளி உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் தொடக்க விழா திருச்சி நகர அரங்கத்தில் (Town Hall) சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதில் கழக முதல்வர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள், பார்ப்பனர்களும் சில தேசியத் திருடர்களும் எங்களைப் பிரிவினைக்காரர்கள் (பிரிவினைவாதிகள்) என்கின்றனர். நாங்களா பிரிவினைக்காரர்கள்? நீங்கள்தாம் பிரிவினைக்காரர்கள். மக்களைக் குலங்குலமாக, சாதி சாதியாகப் பிரித்து ஒன்றுபடவிடாமல் சிதைத்தவர்கள் யார்? நீங்களா, நாங்களா? என்று வீறு முழங்கக் கேட்டார். அவர் மேலும் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டதாவது:

தமிழினத்தை ஏமாற்றி முன்னேற விடாமல் தடுக்கின்ற முயற்சியைப் பார்ப்பனர்கள் தொடர்ந்து செய்துகொண்டு தான் உள்ளார்கள். அறிவியல் உலகில் வாழும் இக்காலத்திலும் இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பெரிய பெரிய பொத்தகங்களாக அச்சிடப்பெற்று அதற்குத் தெய்வத்தின் குரல் என்று தலைப்பும் இடப்பெற்று இந்த நாட்டில் வெளிவருகின்றது என்றால் இதைவிடக் கொடிய ஏமாற்று இவ்வுல்கில் இருக்க முடியுமா?