பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

பெரிதாக நிகழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், 500 இந்து மதக் கோவில்களைக் கட்டித் தர ஒப்புக் கொண்டிருப்பதாகக் கேள்விப்படுகிறோம். இவரன்றி டாட்டாவும் இப் பார்ப்பனிய முயற்சிகளுக்குத் துணைபோக முன் வந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. இன்னும், தென்னாட்டிலும் உள்ள பெரிய பெரிய பார்ப்பன நிறுவனங்களும், ‘சற்சூத்திரா’ நிறுவனங்களும் இவ்வகையில் அவர்களின் முயற்சிகளுக்கு உதவ முன்வந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. போதிய வரலாற்றறிவில்லாமலும், தமிழினப் பற்றில்லாமலும் நம் தமிழினப் பணக்காரக் கொள்ளையர்களும், தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளும் இப்படித் துணை போகலாம் என்று கருதுகிறோம்.

இனி, ஆர்.எசு.எசும்., விசுவ இந்து பரீட்சித்தும் வகுத்துள்ள திட்டங்களையும் நாம் கவனித்தல் வேண்டும். முதல் கட்டமாக, இந்தியாவில், சில தகுதிகள் அடிப்படையில் மாவட்டத்திற்கு இருவர் மேனி 1000 பேர்களைக் கட்டுப்பாடு மிக்க முழுநேரத் தொண்டர்களாகப் பொறுக்கியெடுக்க அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 500 உருபா மேனிச் சம்பளம் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான ஆறு மாதப் பயிற்சியைத், தென்னிந்தியாவில் சிறீசைலத்திலும், வடஇந்தியாவில் காசி, ரிசிகேசம் கோரக்பூர் (சிறீ சைதன்யர் பிறந்த இடம்) ஆகியவற்றிலும் கொடுக்க விருக்கிறார்களாம். மாவட்டத்திற்கு இருவராகப் பொறுக்கப் பட்டவருள், ஒருவர்க்கு, மதமாற்றங்கள் நிகழ்கின்ற இடத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களில், முசுலீம், கிறித்தவ மதங்களுக்குச் செல்ல விரும்புவர்களோடு, நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்களை அம்மதங்களுக்குச் செல்ல விடாமல் எவ்வகையிலானும் தடுப்பதும், இந்துமதத்திலேயே இருக்கச் செய்வதும் என்ற முறையில் பயிற்சி தருவார்களாம். பயிற்சிபெற்ற ஆயிரத்துள் 500 பேர் இந்த முயற்சியைச் செய்கையில், மீதமுள்ள 500 பேர்கள், ஏற்கனவே முசுலீம், கிறித்துவ மதங்களில் உள்ளவர்களை இந்து மதத்திற்கு மாறச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இந்த வகையில் இவர்களுக்குப் பயிற்சி யளிக்கப்படும். அதுவன்றி, பிர்லாவின் முயற்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில், கட்டப்பெற விருக்கும் 500 கோயில்களிலும், முழுக்க முழுக்கப் பார்ப்பனப் பூசார்த்தி(அருச்சகர்)களையே அமர்த்துதலும் அவர்களின் திட்டமாகும்.