பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

227

இந்திய அரசுக்கு வரிசெலுத்தும் குடிமகன் ஒருவன் என்னும் வகையில், இந்திய அரசும், தமிழக அரசும், மறைந்த இந்தியத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தியின் சாம்பலை அஸ்தி’ என்னும் பெயரில், பொதுமக்களின் வழிபாட்டிற்கும் வணக்கத்திற்குமாக, ஊர்ஊராக, நகரம் நகரமாகத் தனி ஏற்பாட்டுத் தொடர்வண்டிகள், வானூர்திகள், வழியாக, ஏராளமான பொருட்செலவில் கொண்டுசெல்லப் பட்டதைக் கண்டித்தும் எதிர்த்தும், இவ் வறிவியல் பொருத்த மல்லாத இந்து மத மூடநம்பிக்கை நிறைந்த செயலை உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், உலகத் தமிழின முன்னேற்றக் கழக முதல்வர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் கடந்த 9.11.84-ஆம் நாள், ஒரு முறைவழக்கை(ரிட்) சென்னை உயர்நெறி மன்றத்தில் தொடுத்தார்.

இவ்வழக்கு உயர்நெறி மன்ற நடுவர் எசு. நடராசன் முன்னர் வந்தது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், இவ்வழக்குத் தொடர்பாகத் தம் முறையீட்டை, நடுவர்முன், தாமே எடுத்துரைத்தார். அவர் வழக்காடும் பொழுது ஏராளமான வழக்கறிஞர்களும் பார்வையாளர்களும் பொதுமக்களும், செய்தியாளர்களும் உயர்நெறி மன்ற வழக்கறையில் நெருக்கியடித்துக்கொண்டு, கூட்டமாகக் குழுமியிருந்தனர். வழக்கு மன்றத்தையே ஒரு பரபரப்புக்கும், வியப்புக்கு அதிர்ச்சிக்கும் உள்ளாக்கிய இவ்வழக்கில், பாவலரேறு அவர்கள் தாமே நடுவர்முன் நேர்நின்று உரத்த குரலில் வழக்காடியது, பார்வையாளர்களுக்குப் பெரும் புதுமையாகவும் உணர்வூட்டுவதாகவும் இருந்தது.

உயர்நெறி மன்ற வரலாற்றிலேயே இந்நிகழ்ச்சி ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இருந்தது என்று அவ் வழக்கைக் கேட்டிருந்த அனைவரும் வியந்து கூறினர்.

தந்தை பெரியார் அவர்கள்தாம் இவ்வாறு உயர்நெறி வழக்கு மன்றத்தில் தமிழில் தம் முறையீட்டை எடுத்துச் சொன்னவர். ஆனால், அதற்குப் பின்னர் பாவலரேறு அவர்களே முதன்முறையாகத் தம் வழக்கைத் தூய இனிய தமிழில் எடுத்துச் சொன்னவர் ஆகிறார். அவரின் இந்தச் செயலை ஆங்கில இதழான ‘இந்தியன் எக்சுபிரசு’ கீழ்வருமாறு எழுதியிருந்தது.

“Petitioner Perunchithiranar, a Tamil Scholar, President of Ulaga Thamizhina Munnetra Kazhagam” and editor of ‘Thenmozhi’ appeared in person and argued in chaste Tamil before the judge”.