பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

தி.மு.க. இதழான முரசொலி இவ்வாறு கூறியது: “தமிழறிஞரான பெருஞ்சித்திரனார் நீதிமன்றத்தில் ஆஜராகி, தமது வழக்கைத் தெள்ளிய தமிழில் தாமே எடுத்துரைத்தார்.”

பெருஞ்சித்திரனார் உயர்நெறி வழக்குமன்றத்தில் நடுவர் முன் தம் முறையீட்டை எடுத்துவைத்து உரையாற்றிய விளக்கம் வருமாறு:

“பெருமை மிகு தமிழ்நாட்டின், சிறப்புடைய உயர்நெறி மன்றத்தின் மாண்புமிகு நடுவர் அவர்களே!

அறிவியலும் மாந்த உரிமைகளும் வளர்ந்து வருகின்ற முன்னேற்றமான ஒரு காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இப்பொழுது, தங்கள் முன்னிலையில் நான் கொணர்ந்திருக்கும் வழக்கு யாரும் சற்றும் எதிர்பாராத, எல்லாரும் அதிர்ச்சியடையத் தக்க, சிலர் வருந்துவதற்குரிய, ஆனால், கட்டாயம் ஆராயத் தகுந்த தேவையான ஒரு வழக்காகும்.

அண்மையில் காலஞ் சென்ற மதிப்பிற்குரிய இந்தியாவின் தலைமையமைச்சர் திருவாட்டி இந்திரா காந்தி அவர்களின் 'அஸ்தி' எனப்படும் உடலெலும்புச் சாம்பலைப் பற்றியதாகும் இவ் வழக்கு.

அவரின் சாம்பல் பற்றிய வழக்கு இதுவென்பதால், அவருக்குரிய பெருமையைத் தாழ்த்தியோ, இழித்தோ கூறுவதாக யாரும் பொருள் கொண்டுவிடத் தேவையில்லை. அவர் இந் நாட்டின் தலைமையமைச்சர் என்பதிலும், பொறுப்புவாய்ந்த ஒரு பணியை ஆற்றி மறைந்துபோயிருக்கிறார் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அதற்குரிய வகையில் அவருக்கென்று சில பெருமைகள் ஆண்டு.

ஆனால் அவரின் 'அஸ்தி என்று கூறப்படும் உடலெலும்புச் சாம்பல், அறிவியல் தகுதியில் மற்றப் பொருள்களின் சாம்பலைப் போன்றதே ஆகும். அதற்கு ஏதேனும் தனிச்சிறப்போ, தனிக் குணநலன்களோ, பெருமைக்குரிய தன்மைகளே இருப்பதாக, அறிவியல் முறையில் எந்த ஒர் அறிவியல் அறிஞரும் (விஞ்ஞானியும்) ஆராய்ந்து கூறிவிட முடியாது.

வெறும் மத நம்பிக்கையில், பொதுமக்கள் கருதுமாறு, ஓர் உயர்ந்த மாந்தரின் சாம்பல் அ'து என்கிற பெருமை தவிர, அதற்கென்று தனிப்பெருமை வேறு இருப்பதாக யாரும் கூற இயலாது.