பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

229

ஆனால், நம் இந்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று கூறிக் கொண்டு, இந்துமதத்தினர் மட்டுமே, பெருமையாக ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் கருதிக்கொண்டிருக்கும் ஒரு மத நம்பிக்கைச் செயலுக்கு இவ்வளவு பெருமையும் மதிப்புரவும் (மரியாதையும்), இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், ஒரு தெய்வத்தன்மையும் கூறி, அதற்குப் பாதுகாவல் முறையில், ஏராளமான காவலர்களையும், படைத்துறையினரையும் கொண்டு, மக்களின் வரிப்பணத்தைச் செலவழிப்பதும், பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கையை வரவழைத்து, அவர்களை மத மூடநம்பிக்கையில் ஆழ்த்துவதும், இந்தியா போலும் ஏழைமையும் கல்லாமையும் அறியாமையும் மூடநம்பிக்கையும் நிறைந்திருக்கும் ஒரு நாட்டிற்கும், அந்த நாட்டை ஆளுகின்ற அரசுக்கும் உகந்த செயல்கள் அல்ல.

இதுபோன்ற செயல்களால், அரசியல் அதிகாரம் பெற்ற ஆளுங்கட்சிக்குத்தான், அரசியல் முறையில், பொதுமக்களிடம் விளம்பரம் பெறுகின்ற வகையில், ஊதியமே தவிர, பொதுமக்களுக்கு இதனால் எந்த வகையான ஊதியமோ நலமோ துளியும் இல்லை.

இதுபோன்ற செயல்கள் மதவாதிகளுக்கும், மத நம்பிக்கையின் அடிப்படையில், பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் போலி மடத்தலைவர்களுக்கும், ‘சந்நியாசி’களுக்கும், மத நிறுவனங்களுக்கும் பொருந்தலாமே தவிர, 70 கோடி மக்களை ஆள்கின்ற இந்திய அரசுக்கோ, 5 கோடி மக்களை ஆளும் தமிழக அரசுக்கோ உகந்ததன்று; செய்யக்கூடிய செயலும் அன்று.

மேலும், இந்திராகாந்தியின்மேல் மக்கள் பேரன்புகொண்ட காரணத்தால், அரசே முன்னின்று செய்யும் இது போன்ற மூடநம்பிக்கை நிறைந்த ஏமாற்றுச் செயலுக்கு, மக்கள் ஆதரவு தரவே செய்வர். கவர்ச்சியான, மத அடிப்படையில் செய்யும் எந்தச் செயலுக்கும் மக்கள் வரவேற்பு இருக்கவே செய்யும்.

ஆனால், மக்கள் விரும்புகிறார்கள், அல்லது வரவேற்கிறார்கள் அல்லது மிகுந்த அளவில் ஆதரிக்கிறார்கள் என்பதாலோ, ஒரு செயலைச் செய்யக்கூடியதாக, சரியானதாக, மக்களுக்கு நலம் விளைவிப்பதாக, அவர்களுக்குத் தேவையானதாக, அறிவியல் சார்ந்ததாக அரசு கருதிவிடக்கூடாது. மூடநம்பிக்கைகளை அரசு ஊக்கக்கூடாது. அவ்வாறு அரசு செய்யுமானால், அதை அறமன்றந் தான் தடுத்து நிறுத்தவேண்டும்.”