பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


அதுவே காரணம் என்றும், அங்கு இந்திராப் பேராயத்தில் (கட்சியில் மட்டுமே) சேர்பவர்களுக்கு உரு. 5,000/- (கவனிக்கவும், ஓர் உறுப்பினர் கட்சியில் சேர உருபா ஐயாயிரம்) வரை தரப்படுகிறது என்றும் பரவலாகப் பேசப்பெறுகின்றன. அங்கு உள்ளூரில் உள்ள இந்திரா பேராயக் குட்டி அரசியல் தலைவர்கள், அக்கட்சியில் சேரும் வேண்டுகை(விண்ணப்ப)ப் படிவத்தை மட்டும் ஒன்று 100 உருபா விலைக்கு விற்கிறார்களாம்! எப்படி இருக்கிறது இந்திராவின் அரசியல் சாணக்கியம்.

இப்படிச் சாமம், (அமைவாகப் பேசி உடன்பாட்டுக்குக் கொணர்வது), பேதம் (எதிர்க்கட்சியில் உள்ள மக்களை வேறு பிரிப்பது), தானம் (உறுப்பினர்களுக்குக் கொடை தருவது), தண்டம் (முடியாவிட்டால் படைத் துறையையும் காவலர்களையும் விட்டுக் கொடுமைப்படுத்தச் செய்வது) ஆகிய நான்கு அரசியல் தந்திரங்களைக் கொண்டும் இந்திரா ஆட்சி நடத்தி வருவது இந்திய குடியரசுக் கொள்கையையே குழிதோண்டிப் புதைப்பதாகும்.

இந்த இடத்தில், பொதுவாக மக்கள், சிறப்பாகத் திராவிடர், குறிப்பாகத் தமிழர் - ஒன்றை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்! இந்திரா என்றால் இந்தியா - என்னும் பொருள் எவ்வாறு அரசியல் கொடுமை வாய்ந்ததோ, அதைவிடக் கொடுமை வாய்ந்தது இந்திரா என்றால் ஆரியம் - பார்ப்பனீயம் - பார்ப்பனீய முதலாளியம் (Baniya - Brahminism) - என்னும் பொருள்! அந்த இடைக்காலப் பொருள், நிலையான பொருளாகி விடாமல் பார்த்துக் கொள்வது நம்முடைய கடமை! நம்மவர் கடமை என்று உணர்ந்து கொள்க:

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். — 558
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்ல
இல்லை நிலக்குப் பொறை – 570
- தென்மொழி, சுவடி : 20, ஓலை : 12, 1984