பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

இன்னும் சமசுக்கிருதத்திற்கு அவர்கள் மதிப்பு வைப்பதுபோல் தமிழ் மொழிக்கு வைப்பதில்லை. எங்கோ ஒரு பாரதியார் பரிதிமாற் கலைஞர் இருந்தார் என்பதற்காகப் பார்ப்பனர்கள் தமிழர்களாகிவிட அவர்களே அணியமாக இல்லை. சமசுக்கிருதத்தைக் கலக்காத தமிழை அவர்கள் ஒப்புக்கொள்வதேயில்லை! பார்ப்பனர்களில் தமிழுக்காக உழைத்தவர்கள் போல் ஆங்கிலேயர்களிலும், பிரஞ்சுக்காரரிலும், செருமானியரிலும், அரபியர்களிலும், தமிழுக்குழைத்தவர்கள் ஏராளமான பெயர்கள் உளர். அவர்களெல்லாரும் தமிழர்கள் என்று கூறி விட முடியாது. இதைச் செயகாந்தன்கள் உணரவேண்டும்.

ஒரு மொழியில் புலமை பெறுதல் வேறு. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கருதுதல் வேறு. ஒரு பெண் வேறொரு குழந்தையைத் தன் குழந்தைப் போலவே கருதி வளர்க்கலாம். ஆனால் அக்குழந்தை அவளைத் தன் தாய் என்று கருத வேண்டும். பார்ப்பனர்கள் தமிழைத் தம் தாய்மொழியாகக் கொள்ளாதவரை அவர்களைத் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது; அவர்களும் தங்களைத் தமிழர்களாகக் கருதிக் கொள்ளவும் மாட்டார்கள். அவர்கள் அவ்வாறு தமிழைத் தங்கள் தாய்மொழியாகக் கருதினால் அதில் கலப்பு நேர்வதைப் பொறுக்கமாட்டார்கள். சமசுக்கிருதத்தில் ஆங்கிலச் சொற்களையோ பிரஞ்சுச் சொற்களையோ கலந்து பேச விரும்பாத ஒருவன், தமிழில் அவ்வாறு கலப்புச் செய்வதை விரும்புகின்றான் எனில், அவன் தமிழைத் தாய்மொழியாகக் கருதுகிறான் என்று எப்படி ஒப்புக்கொள்வது? செயகாந்தன் போன்றவர்களுக்குத் தமிழ்மொழியைத் தூய்மையாக எழுதத் தெரியாத கரணியத்திற்காக அவர் எழுதுவதுதான் தமிழ் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமா? அவ்வாறு ஒப்புக் கொண்டால் சென்னையில் உள்ள ஓர் உயர் விடுதியின் பரிமாறி (Butllor) பேசும் ஆங்கிலத்தையும் ஆங்கிலம் என்றுதானே ஒப்புக் கொள்ள வேண்டும். 'காவிரி ஜலம், கலாசார பலவினம்', ‘பாரத ஞானபூமி' என்பவற்றைத் தமிழாகக் கொள்ள வேண்டுமானால், ‘பானை வாட்டர்’ ‘இருதய வீக்னசு’ ‘பாரத நாலெட்ச் பூமி’ என்பவற்றை ஆங்கிலமாகக் கொள்ளவும், ‘வாய்மை மேவ் செய்தா’ ‘பண்பாட்டு ஞானீபட’ என்பவற்றைச் சமசுக்கிருதமாகக் கொள்ளவும் முன்வரவேண்டும்!