பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/241

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

239

மதம் என்றால் இந்துமதம்தானா? மதத்தலைவன் என்றால் காஞ்சி காமகோடி ஊசைப் பார்ப்பான்தானா? உலா வரும் ஒளிக்கதிர் ‘நிகழ்ச்சிகளில் ஏதோ ஒரு முசுலீம் நிகழ்ச்சியையோ, ஒரு கிறித்தவ நிகழ்ச்சியையோ மருந்துக்குக் காட்டிவிட்டு, மீதி அத்தனையும் இந்துமத நிகழ்ச்சிகளுக்கே பட்டயம் எழுதிக் கொடுக்கப்பட்டு விட்டதா? இந்துமதத்தில்தானா நெய் வடிகிறது? மீதி மதங்களில் என்ன சீழா வடிகிறது?

சாதி வெறியர்களும், மத வெறியர்களும், தேசியம், ஒருமைப்பாடு பேசும் திருடர்களும், கொள்ளை கொலைகாரர்களுளம் ஆட்சியில் உள்ளவரை, நிலைமை இதுதான்; இப்படித்தான் இருக்க முடியும்! மானமுள்ள ஒரு தமிழனாவது இதுபற்றிப் பேச முன்வருகின்றானா? அனைவருமா இளித்தவாயர்களாக, பணத்துக்கு வீங்கிகளாகப் போய்விட்டனர்? காந்தி குடும்பத்துக்கே நாடு அடகு வைக்கப்பட்டு விட்டதா? இங்குள்ளவர்கள் அடிமையாகி விட்டார்களா! கேட்பதற்கே யாருமில்லையா? இந்நிலையில் செயலுக்கு எங்கே வரப் போகிறார்கள்?

இனி, வரலாற்றுச் சான்றுகளோ, அறப்பேச்சுகளோ, இணக்க முயற்சிகளோ, இந்த நாட்டில் எடுபடப் போவதில்லை. இன்னும் பத்து ஆண்டுகளில் எல்லாவற்றையுமே அழித்துவிடுவார்கள். இன்று அரசியலைக் கைப்பற்றிக்கொண்டிருக்கும் எத்தர்கள். தமிழினத்துக்கென்றோ, பஞ்சாபியர்களுக்கென்றோ, அசாமியர்க்கென்றோ, மிசோக்களுக்கென்றோ, நாகர்களுக்கென்றோ, இனிமேல், எந்தத் தேசிய இனத்துக்கும் என்றோ, இனிமேல், எந்த மொழியோ, கலையோ, பண்பாடோ, அல்லது அவ்வினங்களின் தனித்தனியான எந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோ எதையுமே விட்டுவைக்கப் போவதில்லை என்றும், அழித்துவிடுவதென்றும், அரசியல் பணியாப் பார்ப்பன முதலைகள் திட்டங்கள் தீட்டிக் கொண்டன. அத் திட்டங்களின் படிதான்: தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் என்னும் வலிவுமிக்க அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி மக்களை மூளைச் சலவை செய்து வருகிறார்கள்; அதிகாரத்தில் உள்ள வன்முறையாளர்கள்!

இனி, என்ன செய்யப் போகிறோம் நாம்! மதிகெட்டு, மானமற்றுத் தறிகெட்டுத் திசைகெட்டுத் தன்மானமும், தன் மதிப்பும் கெட்டு, நாமும் தேசியத்திற்குப் பாட்டுப் பாட வேண்டியதுதானா? இல்லை, தேசிய இனப் போராட்ட எழுச்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறோமா? எது செய்யப் போகிறோம்! எண்ணிப் பாருங்கள்!

- தமிழ்நிலம், இதழ் எண் : 58, 1985