பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


கோட்பாடுகளை இந்துமதம் ஆதரிப்பதில்லை. இன்னுஞ் சொன்னால் பொருளியல் சமன்பாட்டை அது தவிர்க்கிறது. ஏழைமைக்கும் செல்வ நிலைக்கும் அது முற்பிறவிக் கோட்பாட்டைக் காரணம் காட்டிச் சமச்சீர் நிலைக்கு அது தடையிடுகிறது.

6. அதுபோலவே உழைப்பவனும் உழைக்காமல் இருப்பவனும் இருக்கவேண்டுமென்பதையே அது வலியுறுத்தி, முதலாளியக் கோட்பாட்டுக்கு என்றென்றும் அரண் செய்கிறது. ஆட்சியதிகார நிலைகளைக்கூட அது முற்பிறவிக் கோட்பாட்டுடன் இணைத்துக் குடியரசுக் கோட்பாட்டை அஃது இகழ்கிறது.

7. மக்களின் வாழ்க்கைக் காலத்தில் பெரும்பங்கை அது மத நடவடிக்கைகளுக்கெனப் பயன்படுத்திப் பொது வுழைப்பிற்கும், இயற்கை வள உருவாக்கத்திற்கும் எதிரான கோணத்தில் மாந்த முயற்சிகளை அது திசை திருப்புகிறது.

8. காலத்தையும் முயற்சிகளையும் கட்டுப்படுத்தும் அறிவியல் அல்லாத கோட்பாடுகளை அது வலியுறுத்துகிறது.

9. மாந்தப் பொதுநலமே அறம் என்று கருதாமல், அவனவன் பிறவி நிலைக்கு உகந்தபடி அவனவன் வாழ்வதே தர்மம் என்னும் மாந்த முன்னேற்றத்திற்குப் பொருந்தாத கோட்பாட்டை அது மக்கள் முன்வைக்கிறது. ஒருவன் தன் பிறவிக்கு மேலான நினைவு கொள்வதற்கு முயற்சி செய்வதற்கும் அது தடையாக இருக்கிறது.

10. மதத் தலைவர்களுக்கே, குமுகாய நிலையில் உள்ள எவருக்கும் மேலான இடத்தைத் தருகிறது. மதத்தலைவர்களைக் கடவுள் நிலைக்கு அஃது உயர்த்திவைக்கிறது.

11. இந்துமதம் மக்களை அச்சுறுத்துகிறது; மக்களின் உரிமை உணர்வுகளை நசுக்குகிறது; அவர்களின் தங்கு தடையற்ற அறிவு வளர்ச்சிக்குத் தடையிட்டு, மூடநம்பிக்கைகளை வளர்த்து நிலைப்படுத்துகிறது.

மற்றும் இன்னோரன்ன காரணங்களால் தமிழினத்திற்கு மட்டுமின்றி, மக்கள் இனத்திற்கே இந்துமதம் பொருந்தாத ஒரு கோட்பாடாக இருப்பதை அனைவரும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் நன்கு விளங்கும்.

- தென்மொழி, சுவடி : 22, ஓலை : 2, 1986