பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

முதலாளியத்தின் அகண்ட வாயிலிருந்து மதம் என்னும் நச்சுப் பல்லைப் பிடுங்கியாக வேண்டும்.

இந்த மதம் இந்துமதமாக இங்கே வடிவம் பெற்றுள்ளது. எனவே, இந்துமதச் சாக்கடையைத் தூர்க்காமல் இந்தியாவில் பொதுவுடைமை என்னும் மரத்தை நட்டு வளரச் செய்ய முடியாது. இந்துமதத்தை வேரறுப்பதற்குச் சாதியை முதலில் தீக்கொளுவச் செய்தாக வேண்டும். மதத்தையும் சாதியையும் ஒழிப்பது அத்துணை எளிய செயலன்று. ஆனால் இதைப் பொதுவுடைமை உணர்வுள்ள இளைஞர்கள்தாம் செய்தாக வேண்டும். இந்த நாட்டுப் பொதுவுடைமை உணர்வுள்ள இளைஞர்களுக்கு அத்துணைத் துணிவுள்ளதா? திறனுள்ளதா? அதற்கு முன் அவர்கள் இன்னொரு தெளிவைப் பெற்றாக வேண்டும். அ'து இறைமை வேறு; மதம்வேறு என்று உணர்வது.

முதல்(Capital) எப்படி முதலாளியமாக(Capitalism) வடிவம் எய்தியதோ, அப்படித்தான் இறைமை மதவடிவமாக ஆகியுள்ளது. முதல் தேவை; ஆனால் முதலாளியம் தேவையில்லை. அதுபோலவே இறைமை உணர்வு தேவை; மதவுணர்வு தேவையில்லை. இறைமை ஒருவனைத் தெளிவிப்பது, மதம் ஒருவனை மயக்குவது; இறைமை ஒருவனை உரிமைக்குத் தூண்டுவது; மதம் ஒருவனை அடிமைத்தனத்தில் மூழ்குவிப்பது. நுட்பமான இந்த வேறுபாடுகளைத் தெளிவாக உணர்ந்துகொள்ளாமல், மதத்தையும் முதலாளியத்தையும் ஒழிக்க முடியாது.

நம்மில் சிலர் இறைமையே மதத்திற்கு அடிப்படை என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். 'விதையிருந்தால் அந்த விதைக்குத் தக்க மரம் இருக்கத்தானே செய்யும். நச்சுமரம் ஒன்றின் விதையும் நச்சாகத்தானே இருக்கமுடியும். எனவே, நச்சுமரத்தை ஒழிக்க வேண்டுமானால், அதன் நச்சுவிதையையும் ஒழித்தன்றோ ஆகவேண்டும்; அதுபோல் மதம் என்னும் நச்சுமரத்தின் விதையாகிய இறைமையும் நச்சாகவே இருக்க வேண்டும். எனவே அதையும் ஒழித்தாக வேண்டும்' என்பது அவர்கள் தருக்கம்.

விதை நச்சானது இல்லை. அஃது ஊன்றிய இடந்தான் அந்த விதையினின்று கிளைத்த மரத்தை நச்சாக்கி இருக்கிறது. மாந்தனுக்குள்ள மனம் போன்றது இறைமை. ஆனால் நல்ல சூழல் இல்லையானால் அந்த மனம் தீய மனமாக வளர்வது போல், மாந்தனுக்குத் தேவையான இறைமை, நல்ல சூழலில் வளராமல் மதம் என்னும் நச்சுமரமாக வளர்ந்துவிட்டிருக்கிறது.