பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/248

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

இத்தனை இடர்ப்பாடுகள் படவேண்டியுள்ளன.

அதேபோல், முதல், இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒரு மூலக்கருவி. அக்கருவி தந்நலக்காரர்களால் தவறாகக் கையாளப் பெற்றுப் பலர்க்குத் தீங்கான விளைவுகளைத் தந்துகொண்டுள்ளது. எனவே முதலை அடக்கி ஒடுக்கித் தன்வயப்படுத்தியுள்ள முதலாளியத்தை ஒழித்துக்கட்ட நாம் முயல்கிறோம் - முயலவேண்டி உள்ளது. இனி, முதலாளியம் தீங்கான விளைவுகளைத் தருகிறது என்பதற்காக, அதற்கு மூலமாகவுள்ள முதலையே நாம் ஒழித்துக்கட்ட முயலலாமா? முதல் இல்லாமல் முதலாளியம் எங்கு வந்தது என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு, முதலையே தீர்த்துக்கட்ட முயன்றால் விளைவு என்னவாகும்?

உலக முதல் அனைவர் கைக்குக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதுதான் நம் கொள்கை. அ'து அனைவர்க்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் நம் முயற்சி. அதை விட்டுவிட்டு, எய்தவன் இருக்க அம்பை நொந்துகொள்வதுபோல், முதலாளியம் இருக்க முதலை நோவது பிழையன்றோ? இதில் ஒரு தெளிவை நாம் பெற்றுக் கொண்டால்தான், ஒழிக்க வேண்டுவது எது, வளர்க்க வேண்டுவது எது, என்பவை நமக்குக் கண்ணுக்குக் காட்சியாக விளங்கும்.

எனவே, இளைஞர்களின் நோக்கு, மதத்தை ஒழிப்பதிலும் அதற்குத் துணையாக உள்ள சாதியைத் தகர்ப்பதிலும், இருக்க வேண்டுமே தவிர, இறைமையை ஒழிப்பதில் இருக்க வேண்டாம் என்பதும், முதலாளியத்தை ஒழிக்க வேண்டும், முதலை ஒழிக்க வேண்டாம் என்பதுமாகவே இருக்க வேண்டும். அத்துடன் இவற்றுக்கு மறுதலையாக, இறைமையை வளர்க்க வேண்டும். அதுபோல் முதலையும் வளர்க்கவேண்டும் என்பனவும் நம் கொள்கை என்று கொள்ள வேண்டும். அதோடு, உண்மையான இறைமை வளர்ச்சி மதத்தையும் சாதியையும் ஒழிக்கவுதவும் என்பதையும், உண்மையான முதல் வளர்ச்சி முதலாளியத்தையும் ஒழிக்கவுதவும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

மேலே கூறப்பெற்ற இவ் வுண்மைகளை நாம் தெளிவாக உணர்ந்துகொண்டால் ஒழிய, நம் சாதி மத ஒழிப்பும், முதலாளிய ஒழிப்பும் வெட்டவெட்டத் துளிர்க்கும் முள்மரங்கள் போலவே வளர்ந்துகொண்டுதாம் இருக்கும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.