பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

247

இவ்வுண்மைகளை இன்னொரு கோணத்தில் நின்றும் நாம் பார்த்தல் மிக இன்றியமையாததாகும். அது, நம் இளைஞர்களுக்குச் சாதிவெறி இல்லை; ஆனால் சாதிப்பற்று இருக்கிறது. மதவெறி இல்லை; ஆனால் மதப்பற்று இருக்கிறது. அதேபோல் முதல் வெறியில்லை; ஆனால் முதலாளியப் பற்று இருக்கிறது - என்பது தான்.

சாதிவெறிக்கும், சாதிப்பற்றுக்கும் என்ன வேறுபாடு ? அதேபோல் மதவெறிக்கும் மதப்பற்றுக்கும், முதல்வெறிக்கும் முதலாளியப்பற்றுக்கும் என்ன வேறுபாடு? - இவற்றையும் நாம் தெளிவாக, வேறுபிரித்து உணர்தல் வேண்டும்.

இக்காலத்துப் படித்த இளைஞர்கள், வெளியுலகில் பழகும் சூழல் வளர்ச்சியடைந்த நிலையில் இருப்பதால், அவர்களிடம் சாதிவெறி மண்டியிருப்பதில்லை. ஆனால் அவர்கள் திருமணத் தொடர்பு முதலியவற்றை மேற்கொள்ளும் பொழுது, அவர்களின் சாதிவளையத்தை விட்டு வெளியேவர விரும்புவதில்லை. மேலும் தாங்கள் இன்ன சாதி என்கின்ற உணர்வு எப்பொழுதும் அவர்கள் உள்ளத்தில் விடிவிளக்காக எரிந்துகொண்டே உள்ளதை, மற்ற புறவுணர்வு விளக்குகளின் ஒளி இல்லாத நேரத்தில் நன்கு அறிந்து கொள்ளலாம். இங்குப் புறவிளக்குகளின் ஒளி என்பது கலையுணர்வு, அறிவுணர்வு, பொது ஈடுபாடு, விளையாட்டுணர்வு பிற பொழுது போக்குணர்வு - ஆகியவற்றின் சூழ்நிலைகள் எனப் பொருள் கொள்க. அவை எவற்றிலும் ஈடுபடாமல் தாமும் தம் குடும்பமுமாகவோ, நம் உறவுமாகவோ - இருக்கும்பொழுது, தம் சாதியுணர்வு தலையெடுத்திருப்பதை ஆய்வினில் பார்க்கலாம். இதுதான் சாதிப் பற்று. அஃதாவது வெளிப்படையாக இருப்பது சாதிவெறி; உள் முகமாக இருப்பது சாதிப்பற்று. இது சாம்பல்நெருப்புப் போல் உள்ளேயே கனன்றுகொண்டிருக்கிறது. ஆனால் புறத்தே இவர்கள் சாதியொழிப்பைப் பற்றியும், கலப்புமணத்தைப் பற்றியும் பெண்கள் விடுதலை பற்றியும் வீரமாக மேடைகளில் பேசுவதைப் பார்க்கலாம்.

இனி, பொதுவுடைமையுணர்வும், பகுத்தறிவுணர்வும் உள்ள நம் இளைஞர்களும் இப்படித்தான். அவர்கள் பொதுவுடைமைக் கொள்கையைப் பேசிக்கொண்டே , முதல் உணர்வுக்கும் ஆட்பட்டிருக்கும் தன்மையை ஆய்ந்துபார்த்து உணரலாம். பொதுவுடைமைக் கொள்கை பேசுகின்ற ஒருவருக்கு ஏதோ ஒருவகையில் - பழைய மூதாதையர் வழியிலோ, புதிய திருமண உறவு போன்ற வழியிலோ, புதிய தொழில் முயற்சிகளிலோ முதல் (பொருள்) வந்து சேர்ந்தால், முன்பிருந்த பொதுவுடைமைக்