பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


கொள்கை உணர்வில் படிப்படியாகப் பிடிப்புத் தளர்வதையும், முதலாளிய நாட்டம் தோன்றுவதையும் ஆய்ந்து காணலாம். இதை எழுதுகிறவர் எளிதாக இக் குற்றச்சாட்டை அவர்கள்மேல் சுமத்தவில்லை. கடந்த நாற்பதாண்டுகளின் தொடர்ந்த பொதுநல ஈடுபாட்டில் கண்ட உண்மைகளின் வெளிப்பாடே இதுவாகும். முதல் வைத்திருப்பவ னெல்லாம் முதலாளியில்லை. முதலாளியக் கோட்பாடு உடையவனே முதலாளி. அவன் உணர்வே முதலாளிய உணர்வாகும். அவன் அறிவு, அன்பு, செயல் முதலிய அனைத்தும் முதலாளிய உணர்வு கொண்டவை. முதலாளிய உணர்வின் உள்நோக்கம் சுரண்டல். எனவே, பிறரைச் சுண்டித் தன் முதலைப் பெருக்கவேண்டும் என்னும் மனப்பான்மையே முதலாளிய மனப்பான்மை யுடையதுதான். இந்நிலையில் பொதுவுடைமை உணர்வுள்ளவன், முதலாளியாக மாறுவானானால், முதலாளியத்தை இன்னும் திறமையாக, வெளிக்குத் தெரியாதவாறு கரவாகக் கடைப்பிடிக்கிறான்.

இந்நிலை இந்தியாவில் எண்பது விழுக்காடு இருந்தால் வெளிநாடுகளில் அறுபது அல்லது ஐம்பது அளவில் இருக்கும். எனவே, இங்குத் தூய்மையான பொதுவுடைமை உணர்வு கால்கொள்வது அரிதினும் அரிதாக இருக்கிறது.

இனி, இதே வகையில்தான் மதவுணர்வும், சாதிவுணர்வும் அறவே ஒழியாதவிடத்துக் கொண்டிருப்பது மதவெறி. சாதிவெறி மதவெறி - இரண்டும் வெளியே தெரியாமல் சாதிவுணர்வாகவும் மதவுணர்வாகவும் அமுங்கியிருக்கையில், இறையுணர்வும் சிறு விடிவிளக்குப்போல் எரிந்துகொண்டு இருக்கும் என்பது காலம் இடம் வரும்பொழுது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். இவற்றை அவரவர் பட்டறிவால் உணர்ந்தால்தான் உண்டு. மற்றபடி யாராலும் உணர்த்தவும் இயலாது; யாரும் அவ்வாறு உணர்த்தி விடுவதும் இல்லை.

இவ்வாறு பொருள்நசையும், சாதிநசையும், மதநசையும் இந்தியாவில் உள்ள மக்களில் ஏறத்தாழ தொண்ணூற்றைந்து விழுக்காட்டு மக்களிடம் இருப்பதை எவரும் எங்கும் எந்நிலையிலும் ஆய்ந்து அறிந்து கொள்ளலாம். இதைப் பொய்யென்று எவராகிலும் மெய்ப்பிக்க முற்படுவாரானால், ஒன்றால் அவர் இந்திய மக்களியல் உணராதவராகவோ, உண்மையறிவு வாயாதவராகவோதாம் இருத்தல் வேண்டும். ஆனால் அவரும் உண்மையை உணர்ந்துகொள்ள நெடுங்காலம் ஆகாது.

- தென்மொழி, சுவடி : 23, ஓலை : 11, 1987