பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

253


இளைஞர்கள் உண்மைகளை அறிந்துகொள்ள இயலாதவாறு - அழிச்சாட்டியம் செய்து வருகின்றனர். ‘ஆரியமாவது - திராவிட மாவது ? அவை எங்கே இருக்கின்றன’ என்று வெளிப்படையாகவோ இப்பொழுதுள்ள இந்திரா பேராயக் கட்சியின் வரலாறு தெரியாத கத்துக்குட்டித் தலைவர்களெல்லாரும் வாய்க்கு வந்தபடி பேசிப் பகடிசெய்தும் வருகின்றனர்.

இவர்களுக்கு ஆப்பு வைத்து அறைகிறது போல், இப்பொழுது ஒரு செய்தி நடந்துவருகிறது. அதுதான் அண்மையில் தில்லித் தொலைக்காட்சியினின்று கிழமைதோறும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிற ‘இராமாயணத் தொடர் நாடக’ நிகழ்ச்சியாகும். இந்தி மொழியில் ஒளிபரப்பாகிவரும், இந் நாடகத்தில், பச்சையாக ஆரிய - திராவிடப் பூசல்கள் உரையாடல் வடிவில் பேசப்பெற்று வருவதை அனைவரும் கவனித்திருக்கலாம். இராமன் ஆரியர் தலைவன் என்றே புகழ்ந்து பேசப்பெறுகிறான். இந்நாடு ஆரிய நாடு - ஆரிய நிலம் - என்று வரலாற்றை மூடிமறைக்கின்றவாறு போலிக் கருத்துகள் வெளிப்படுத்தப் பெறுகின்றன.

ஆரியரை உயர்த்திக் கூறுகின்ற வகையில் ஆரிய - திராவிடப் பூசல்களைப் பேசுவது மட்டும் இவர்களுக்குத் தேவையாகிறது போலும் இதன் தன்மையை இங்குள்ள இந்திரா கட்சியிலுள்ள வரட்டுத் தலைவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டுகிறோம். ஆரியர்கள் உயர்வாகவும் திராவிடர்கள் இந் நாடகத்தில் தாழ்வாகவும் கூறப்படுவது, இவர்கள் கறிக்கு வேண்டுமானால் உறைக்காமல் இருக்கலாம். ஆனால், இங்குள்ள தமிழர்கள் எல்லோரும் இவர்களைப் போல் உணர்வற்றுற மானமற்று இருக்க முடியுமா? நிலை இப்படியே தொடருமானால், இந்தியாவில் இவ்விருபதாம் நூற்றாண்டு எல்லையிலேனும் மீண்டும் ஒர் இராமாயணக் கதை நடைபெற்றாலும் வியப்பதற்கில்லை! ஆனால் முடிவு வேறாக இருக்கும்.

- தமிழ்நிலம், இதழ் எண். 84, 1987.