பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

275


(Rules), முறைகளையும் (Regulations) கற்று அறிந்து கொள்ளாமல், எப்பொழுதும் அதிகாரிகளையே நம்பியும் சார்ந்தும் இருப்பார்கள்: அவர்கள் சொல்வதையே கேட்பார்கள், ஆட்சியில் ஒரே கட்சியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த ஆட்சிக் காலமான ஐந்தாண்டுகளும் தொடர்ந்து இருப்பார்களானால், படிப்படியாக அதிகாரிகளின் பிடிப்புகளிலிருந்து தாங்கள் விலகி நேரடியாகவே தங்களின் துறை நலன்களையும் ஆளுமைகளையும் அவர்களால் கவனிக்க முடியும். ஆனால், இடையிடையே வேறு வேறு அரசியல் காரணங்களுக்காகத் தாங்கள் மாறுதல்களுக்கு உள்ளாக்கப் பெறுவார்களானால், அதிகாரிகளின் தொடர்பின்றி அவர்கள் தம் விருப்பமாக இயங்கும்படி தங்களை எப்பொழுதுமே தகுதிப்படுத்திக் கொள்ள முடியாது.

தேசிய முன்னணி அரசு கவிழ்க்கப்பெற்று, சந்திரசேகரர், சனதா தளம் சோ) என்னும் புதிய குழுவை உருவாக்கி, இந்நாட்டின் அரசியல் இரண்டகர் இராசீவ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்திருப்பது, பதவிப் பித்தர்களுக்கும், அதிகார வெறியர்களுக்கும், சூழ்ச்சிக்காரர்களுக்குகம், கட்சி மாறிகளுக்கும், அரசியல் கொள்ளையர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு ஒர் ஆட்சியால் கிடைக்க வேண்டிய ஆட்சி நலன்கள் அறவே கெடுமன்றோ? மேலும் அரசியல் போட்டிகள், விளம்பர வணிகப் போட்டிகளாக மாறிவருகின்ற பொழுது, மக்கள் தங்கள் நலன்களை இழப்பதுடன், தாங்கள் அரசியல் சூதாட்டக்காரர்களின் கைகளில் சிக்கிப் பகடைக் காய்களாக உருட்டப்படுகிறார்கள். இந்நிலை தொடருமானால், மக்களிடை குடியரசு உணர்வே அற்றுப் போய்விடும். தவறான குடியரசு கொடுங் கோலான முடியரசைவிட மிகக் கொடுமையானது. இந்த வகையில், இப்பொழுதுள்ள அரசியல்காரர்கள் அனைவருமே பதவி, பணம், புகழ் ஆகியவற்றுக்காக அலைபவர்களாகவே உள்ளனர். மக்கள்நலம் கருதுபவர் ஆயிரத்தில் ஒருவர் இருப்பாரா என்பது ஐயமே!

இற்றை நிலையில், இந்தியாவில், அரசியல் நிலையிலும் சரி, ஆளுமை அதிகார நிலைகளிலும் சரி, பார்ப்பனர்களே மேலோங்கி யிருக்கின்றனர் என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆட்சியும் அதிகாரமும் எப்பொழுதுமே அவர்கள் கைகளில் உள்ளபடியே அவர்கள் இயங்குவார்கள். இதற்கென அவர்கள் பொருளியல் நிலையில் முதலாளிகளுடன் இணைந்து நிற்கிறார்கள். மதநிலையில் இந்துக்களுக்குத் தலைமை தாங்குகிறார்கள். எனவே, இந்திய அரசியலில் யார் தலைமையிடத்துக்கு வந்தாலும் அவர்களை இந்த மூன்று வலிவான கருவிகளைக் கொண்டே வீழ்த்திவிடுகிறார்கள்.