பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/295

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

293


செய்தனர். ஆரியர்கள் பேசிவந்த வேதமொழி என்னும் செப்பமும் செழுமையும் இல்லாத ஒருவகைக் கரடு முரடான மொழி, நம் பழந்தமிழர்க்கு விளங்காமலிருந்ததால், அவ் வேதமொழியைத் தேவமொழி என்றும், அதிலேயே தேவர்களும் தெய்வங்களும் பேசிக் கொள்கிறார்கள் என்றும் கற்பனையாகப் பொய் கூறி, அப்பழந்தமிழ் மக்களை ஏமாற்றினர். அன்பிலும் விருந்தோம்பலிலும் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் ஆரியர்களைவிடப் பல மடங்கு முன்னேறி மேம்பட்டிருந்த பழந்தமிழர்கள் ஆரியர்கள் கூறிய பொய்யுரைகளை முழுமையாக நம்பி அவர்களுடைய கருத்துகளையும் கொள்கைகளையும் பின்பற்றி அவர்களிடம் ஏமாறினர்; அவர்களை நம்பினர்.

இவ்வாறு ஏமாற்றத்திற்கும் நம்பிக்கைக்கும் உட்பட்ட பழந்தமிழர்கள், அவ்வாரியர்களின் வேதக்கருத்துகளை ஏற்றனர். பின் படிப்படியாக முழுமையும் வளர்ச்சியும் பெறாமலிருந்த அவர்களின் வேதமொழிச் சொற்களையும், நம் பழந்தமிழினத்தவர்கள் பேசிவந்த வடதமிழ்மொழிச் சொற்களையும் கலந்து, மக்கள் புழக்கத்துக்காக சமசுகிருதம் என்னும் ஒரு புதிய மொழியைச் செய்துகொண்டனர். சமசுகிருதம் என்னும் சொல்லிற்குக் ‘கூட்டிச் செய்யப்பட்டது’ (அஃதாவது வேதமொழி, பழந்தமிழ்மொழி ஆகியவற்றை இணைத்துக் கலந்து செய்யப்பெற்றது) என்பது பொருளாகும்.

சமசுகிருத மொழியை ஆரியர்கள் உருவாக்கிக் கொண்ட பின் அம்மொழியிலேயே தங்கள் பழைய வேதத்தை நான்கு பிரிவுகளாக வகுத்து, அவற்றிற்கு இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு பெயர்களை இட்டனர். அதன் பின்னர்ப் படிப்படியாக அவற்றின் கருத்துகளை ஒட்டிப் பற்பல கதைகளையும் நெறிகளையும் எழுதி அவற்றுக்கு இதிகாசங்கள், தர்மங்கள் என்று பெயரிட்டனர். அத் தர்மங்களுக்காகவும் சில பல தேவக்கதைகளை எழுதி, அவற்றுக்குப் புராணங்கள் என்று பெயரிட்டு, மக்களிடைப் புழங்க விட்டனர். அவற்றை மக்கள் நம்பவேண்டும் என்றும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இல்லாவிடில் அவர்கள் தெய்வக் குற்றத்திற்கு பாவத்திற்கு ஆளாகி நரகம் (தீயுலகம்) புகுந்து தண்டனை பெற வேண்டும் என்றும், அத்தண்டனையின் காரணமாக அவர்கள் அடுத்தடுத்த பிறவிகளில் கொடுமையான விலங்குகளாகவும், நச்சு உயிரிகளாகவும் பிறந்து உழல வேண்டும் என்றும், அவ்வாறின்றி மக்களாகப் பிறந்தால் கீழ்ச்சாதிகளிலேயோ, ஏழைமையராகவோ, உறுப்புகள், குறைந்தவர்களாகவோ (குருடு, செவிடு, ஊமை, கூன், நொண்டி முடம், அலி, கொடு நோயாளி முதலியவர்களாகவோ) பிறந்து துன்பமும்