பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

முடியாது. எவ்வளவு சிறந்த மொழிப் புலவரானாலும் இசைப் புலவரானாலும் தன்மானமுள்ள தமிழர்களானால் அவ் வானொலி நிலையங்களின் முற்றங்களிலும் ஒதுங்க முடியாது.

தமிழகத்தின் தனிப்பெரும் புலவர்களாகிய மறைமலையடிகள், பாவாணர் ஆகியோரின் குரல்களை இவ் வானொலி நிலையங்கள் ஒருமுறைகூடப் பயன்படுத்திக் கொண்டதே இல்லை. ஆரியப் பார்ப்பனரின் தமிழ் அடிவருடிகளே வானொலி நிலைய நிகழ்ச்சிகளுக்கு அங்காந்து கிடந்து இடம்பிடிக்கின்றனர். பார்ப்பனரின் யானை வாய்களுக்குத் தப்பி விழும் எச்சில்களே இவ் வெறும்புகளுக்கு நல்லுணவாகப் பயன்படுகின்றன. அப்பெருமையில் இவர்கள் தலை கால் புரியாமல் நடந்துகொள்ளுகின்ற வகைகள், இவ் வேதுங்கெட்ட தமிழர்களுக்கும், அவர்களின் கைகளில் உள்ள உலகின் உயர்ந்த மொழியாகிய தமிழுக்கும் மறைமுகமாக கேடுகளாகவே விளங்குகின்றன. இவ்வானொலிப் புலவர்கள் வடமொழிப் பெயர்களாகக் காட்டுகின்ற இசைப்பெயர்கள் முழுவதும் திரிக்கப் பெற்ற தூய தமிழிசைப் பெயர்களே என்பதைத் தமிழிசை வல்லோர் நன்கு உணர்வர். இசைப்பேரரசு, பண்ணாராய்ச்சிப் பாவாணர், குடந்தை சுந்தரரேசனார் இவ்வகையில் செய்துவருகின்ற ஆய்வுரைக்கு எந்தப் பார்ப்பானும் செவிமடுத்ததாகத் தெரியவில்லை. அவர்களுக்கு முந்தைய விபுலானந்த அடிகளின் அரும்பெரும் ஆய்வுரைகளும் புறக்கணிக்கப் பெறுகின்றன. இற்றைக் கருநாடக இசை முழுவதும் தூய தென்தமிழ் இசையேயாகும் எனத் தம் துண்மாண் நுழைபுல வன்மையால், உரக்கப் பேசி மெய்ப்பித்து வருகின்றார் என்னும் கரணியத்தாலேயே, இசைப் பேரறிஞர் குடந்தை சுந்தரேசனார்க்கு வானொலியிலும், பிற இசை நிகழ்ச்சிகளிலும் இப் பார்ப்பனர்கள் இடம் தருவதே இல்லை. இதையறிந்து ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு புழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

நாம் தமிழுக்கோ தமிழினத்திற்கோ ஆக்கம் உண்டாகும்படி பட்டிமன்றமோ, மாநாடோ ஊரே வியக்குமளவிற்கு நடத்தி வானொலித் துறைக்குச் செய்தியறிவித்துக் கொண்டாலும்கூட, அவர்கள் வந்து அதைப் பதிவதும் இல்லை; வானொலியில் ஒலிபரப்புவதும் இல்லை. ஆனால் அவர்கள் இன ஆக்கத்திற்கும் பெருமைக்கும் உகந்தவாறு, இராமாயணச் சொற்பொழிவோ, பாரதக் கதைப் பட்டிமன்றமோ, போன்று ‘அவாள்’ இன நிகழ்ச்சிகள் எது நடந்தாலும் ஒரு நிகழ்ச்சியைக்கூட விடுவதில்லை.