பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

37

அறிவும், ஆட்சியியல் பட்டறிவும், கட்சித் தலைமையும் உள்ள ஒருவர் அத்துறைகளில் நூல்கள் எழுதி நாட்டின் ஆளுமையறிவை வளர்க்க முயலாமல், மாம்பலத்து மகாலிங்க அய்யர் இராமாயணம் போல் பாகவதங்களையா மக்களுக்குச் சொல்லிக் கொண்டு கிடப்பது? ஆனால், அவ்வாறு அவர் எழுதுகிறார் என்றால், அதில் ஒரு வரலாறே அடங்கியிருக்கின்றது. பார்ப்பனருக்கு நாட்டு நடப்புகளைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ இருக்கும் கவலைகளெல்லாம், தங்களுக்கு வழிவழியாக உள்ள சாய்காலைத் துர்த்துவிடக் கூடாதே என்பதும் மேலும் அவர்களுக்கு அவ்வகையில் எவ்வாறு வலிவு சேர்த்துக்கொள்வது என்பதுந்தான்.

தமிழ்நூல் அழிப்பு!

இனி, அவர்களின் தந்திர முறைகளில் இரண்டாவது தமிழில் இதுவரை வெளிவராத பழைய நூல்களை ஓலைச் சுவடிகளினின்று சமசுகிருதத்தில் பெயர்த்தெழுதிக் கொண்டு தமிழ் மூலங்களை அழித்துவிட்டுப் பின்னர், அவற்றையே மூல நூல்களாகக் காட்டிக் கொள்வது.

இக்கருத்தை நாம் சொல்வதில்கூட அவர்களுக்கும் அவர்தம் அடிமைகளுக்கும் எரிச்சல் இருக்கலாம். அவர்கள் இனத்தவரும், அவர்களின் தன்மைகளையெல்லாம் ஒருவாறு அறிந்து கொண்டவருமான வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் என்ற பரிதிமாற் கலைஞரே அவரின் ‘தமிழ்மொழியின் வரலாறு’ எனும் நூலில் இக்கருத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றார். அவர் எழுதுகின்ற சில பகுதிகளைப் பாருங்கள்.

“வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து, அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர். தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர் (பிராமணர்) அரசர் (ஷத்திரியர்), வணிகர் (வைசியர்), வேளாளர் (சூத்திரர்) என்ற நால்வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டிவிட்டனர். இன்னும் அவர் தம் புத்தி நலங்காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமர்ந்துகொண்டனர்” (பக்கம்-33).